மாணவர்களுக்கு கொரோனா தொற்று: அண்ணா பல்கலைக்கழகத்திடம் அறிக்கை கேட்கிறது உயர்கல்வித்துறை…

Must read

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு  உறுதியாகி உள்ளதால், அதுகுறித்து உயர்கல்வித்துறை  அண்ணா பல்கலைக்கழகத்திடம் விளக்க அறிக்கை கேட்டு தகவல் அனுப்பி உள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று குறைந்த வரும்  நிலையில், இறுதியாண்டு மாணாக்கர்களுக்காக கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.  சென்னை  ஐ.ஐ.டி.யில் இதுவரை  191 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு தொற்று பரவி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் மாணவர்கள் சிலருக்கு அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் முதுநிலை மாணவர்கள் 6 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. ஆனால், அவர்களிடம் எந்தவித அறிகுறியும் தென்படவில்லை என டீன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளி நபர்கள் வராத வகையில் சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தமிழக  சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதா கிருஷ்ணன் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐ.ஐ.டி. வளாகங்களில் இன்று ஆய்வு செய்தார். சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,  தொற்று குறைந்து விட்டதாக அலட்சியம் காட்ட வேண்டாம். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களும் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கல்லூரி உணவுகங்களில் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஆய்வகங்கள் மற்றும் கல்லூரி வளாகங்களில் தனி நபர் இடைவெளியே கடைபிடிக்க வேண்டும். அலட்சியம் போக்கில் செயல்படும் கல்லூரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணாக்கர்களுக்கு எப்படி கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது, கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை சரியாக கடைபிடிக்கவில்லையா என்பது குறித்து,  அறிக்கை அளிக்கும்படி தமிழக உயர்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

உயர்கல்வி மாணாக்கர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால்,  வகுப்புகளை தள்ளி வைப்பது குறித்து  தமிழகஅரசு ஆலோசித்து விரைவில் அறிவிப்பு வெளியிடும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

More articles

Latest article