புனே

கொரோனா தாக்கம் காரணமாக புனே நகரில் இந்தியாவின் முதல் சுயசேவை பெட்ரோல் பங்க் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனத்தில் செல்வோர் அங்குள்ள ஊழியர்களிடம் எத்தனை லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் தேவை என்பதைச் சொல்லி வாகனத்தில் ஊழியர் மூலம் நிரப்பிக் கொள்வார்கள், ஒரு சிலர் இத்தனை ரூபாய்க்கு பெட்ரோல் அல்லது டீசல் தேவை எனக் கூறினால் ஊழியர் நிரப்புவார்.   ஆனால் அமெரிக்கா,பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகளில் சுய சேவை பெட்ரோல் பங்குகள் உள்ளன.

தற்போது கொரோனா தொற்று நாடெங்கும் அதிக அளவில் பரவி வருவதால் சுயசேவை என்பது பலரும் விரும்புகின்றனர். தற்போது சமூக இடைவெளி மிகவும் அவசியமாகப் பின்பற்ற வேண்டி உள்ளதால் புனே நகரில் ஒரு பெட்ரோல் பங்க் சுயசேவை முறையில் மாற்றப்பட்டுள்ளது.    இது புனே நகரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே அமைந்துள்ள பாரத் பெட்ரோலியம் பங்க் ஆகும்.

இங்கு வாடிக்கையாளருக்கு மூன்று விதமாக எரிபொருள் நிரப்ப வாய்ப்பு அளிக்கப்படுகிறது.  முதல் விதமாக எத்தனை லிட்டர் தேவை என்பதை வாடிக்கையாளரே தேர்வு செய்து அதற்கான பணத்தைச் செலுத்தி தாமே நிரப்புவது.  இரண்டாவது விதமாக எத்தனை ரூபாய்க்குத் தேவை என்பதை தேர்வு செய்து அத்தனை பணம் செலுத்தியதும் தானே நிரப்புவது,  மூன்றாவதாக எரிவாயு எத்தனை லிட்டர் என்பதைத் தேர்வு செய்து நிரப்பிக் கொள்வது.

இந்த முறைகளால் இங்கு ஊழியர்கள் தேவையோ அவர்களுடன் உரையாடுவதோ குறைகிறது  தற்போது ஒரு சிலருக்கு இந்த பெட்ரோல் பங்கில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைச் சொல்லித் தர மட்டுமே ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.    அது மட்டுமின்றி இந்த சுயசேவை பெட்ரோல் பங்குகள் மூலம் மற்ற சுகாதார வசதிகளும் அளிக்கப்படுகிறது.