டில்லி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பயணிகள் ரயிலையும் இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.
உலகெங்கும் பரவி வரும் கோரானா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதையொட்டி அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்லவும் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதையும் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவ்வகையில் ரயில்வே வாரிய தலைவர் மற்ற பிராந்திய மேலாளர்களுடன் ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தி உள்ளார். அப்போது மக்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வதைத் தடுப்பதற்காக முயற்சிகள் குறித்துப் பேசப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு சில ரயில்களில் பயணித்தவர்கள் மூலம் கொரோனா பரவியது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் முதலில் வரும் 25 ஆம் தேதி வரை பயணிகள் ரயில் போக்குவரத்தை முழுவதுமாக நிறுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் அனைத்து சேவைகளையும் மார்ச் 31 வரை ஏற்கனவே நிறுத்தி உள்ளது. அதனால் இந்திய ரயில்வே தனது அனைத்து பயணிகள் ரயில் சேவையை வரும் 31 ஆம் தேதி வரை நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.