டெல்லி: சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவருவதால், அந்த மாநிலங்களில் கொரோனா சோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு வந்த நிலையில், பொதுமக்களின் அஜாக்கிரதை காரணமாக தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா உள்பட 5 மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் தொற்று பரவலில் 74 சதவீதம் பேர், கேரளா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். கேரளாவில் சராசரி கோவிட் பாதிப்பு குறைந்தபட்சம் 34,800 முதல் அதிகபட்சமாக 42,000 வரை இருந்து வருகிறது. அதுபோல, மகாராஷ்டிராவிலும் தொற்று பாதிப்பு 18,200-லிருந்து 21ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் 21ந்தேதி மாலை நிலவரப்படி, மேலும் 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 48 ஆயிரத்து 275 (8,48,275) ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 5 மாநிலங்களில், துரித சோதனையை விடுத்து, ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.