கொரோனா தொற்று பொதுமுடக்கத்தில் இருந்துஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இருந்தாலும் தமிழகம் முழுவதும் தொற்று பாதிப்பு தினசரி 6ஆயிரம் அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக சென்னையில், தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு வந்த நிலையில், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் ஆயிரத்துக்கும் குறைவாக இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டி ஆயிரத்து 200 வரை உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவல் படி சென்னையில் கடந்த 7 நாட்களில் 0.1 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னையில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,63,423 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,49,601 பேர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது 10,656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,166 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலி மண்டலத்தில் 6.3 சதவீதமும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 3.7 சதவீதமும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2.4 சதவீதமும், வளசரவாக்கம் மண்டலத்தில் 2.1 சதவீதமும், பெருங்குடியில் 1.8 சதவீதமும், ராயபுரத்தில் 0.9 சதவீதமும், தண்டையார் பேட்டை மண்டலத்தில் 0.7 சதவீதமும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
அதேபோல் அண்ணாநகர், அம்பத்தூர் மண்டலத்தில் தலா 0.1 சதவீதமும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 0.2 சதவீதமும், அடையாறு மண்டலத்தில் 0.4 சதவீதமும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 0.7 சதவீதமும், மாதவரம் மண்டலத்தில் 1.3 சதவீதமும், திருவொற்றியூர் மண்டலத்தில் 2 தவீதமும், ஆலந்தூர் மண்டலத்தில் 6.8 சதவீதமும் பாதிப்பு குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 60.21 சதவீதம் பேர் ஆண்கள், 39.79 சதவீதம் பேர் பெண்கள். மேலும் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2.05 சதவீதமும், 10 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் 5.92 சதவீதமும், 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் 17.74 சதவீதமும், 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் 18.70 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் 40 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் 17.72 சதவீதமும், 50 முதல் 59 வயதினர் 18.50 சதவீதமும், 60 முதல் 69 வயதினர் 11.69 சதவீதமும், 70 முதல் 79 வயதினர் 5.53 சதவீதமும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2.15 சதவீதமும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.