சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், போதிய பயணிகள் இன்றி, சென்னையில் இன்று 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா 2வது அலை அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. தினசரி 2ஆயிரம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகள், விமான பயணிகளுக்கு இ-பாஸ் போன்ற நடவடிக்கைகளால், விமான நிலையமே பயணிகள் இன்றி வெறிச்சோடிக்கிடக்கிறது.
இதையடுத்து, கடந்த சில நாட்களாக சென்னையில் ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக 18 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று (ஏப்ரல் 15) இரு மடங்காக அதிகரித்து 36 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படும் பெங்களூரு விமானங்கள் 4, டெல்லி விமானங்கள் 3, மும்பை விமானங்கள் 3, இந்தூா் விமானங்கள் 2, ஹைதராபாத் 1, நாக்பூா் 1, புனே 1, சூரத் 1, மங்களூர் 1, அந்தமான் 1 ஆகிய 18 விமானங்களும், அதைப்போல் அந்தந்த இடங்களிலிருந்து சென்னைக்கு திரும்பி வரும் 18 விமானங்களும் என மொத்தம் 36 விமானங்கள் இன்று (ஏப்ரல் 15) ஒரே நாளில் ரத்து ஆகியுள்ளன.
இன்று (ஏப்ரல் 15) சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வருகை விமானங்கள் 112, புறப்பாடு விமானங்கள் 109 என்ற எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. அவைகளிலும் மிகவும் குறைந்த அளவு பயணிகளே பயணிக்கின்றனா் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.