கோவில் இசையை வீதிகளுக்கு கொண்டுவந்த கொரோனா..
இந்த கொரோனா ஊரடங்கு இசைக்கலைஞர்களையும் விட்டு வைக்கவில்லை.
கோவில்களிலும், திருமணம் போன்ற வைபவங்களிலும் நாதஸ்வரம் வாசித்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வந்தவர் வேடசந்தூரை அடுத்த கெச்சினிப்பட்டியை சேர்ந்த நாதஸ்வரக்கலைஞன் சரவணன்
தனது குடும்பத்தின் ஐந்து ஜீவன்களுடன் எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர் இன்று குடும்பத்தினரை காப்பாற்றும் பொருட்டு அரிசி பருப்புக்காக வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று வாசித்து வருகிறார்.
“நான் காசு வாங்கி என் வித்தையை கேவலப்படுத்த விரும்பல. என் குடும்பம் சாப்பிடுவதற்காக அரிசி, பருப்புனு தான் வாங்குறேன். கல்யாணம், கோவில்னு மாசம் 10000 ரூபாய் வரை கிடைக்கும். அது போதும் என் குடும்பத்தை ஓட்ட. ஆனா இப்போ இந்த கொரோனாவால எந்த வருமானமும் இல்லாம, கைல இருந்ததெல்லாம் காலியாகி, வேற வழியில்லாம தான் இந்த முடிவை எடுத்தேன்” என்கிறார் 43 வயதான இந்த நான்காம் தலைமுறைக்கலைஞன்.
அரசு அளித்த ரூ. 1000/- மற்றும் மளிகைப்பொருட்கள் ஒரு சில நாட்களே வந்தன. முன்பெல்லாம் கடையில அக்கவுண்ட் வெச்சு வாங்கிக்குவேன். அப்புறம் நிகழ்ச்சி போயிட்டு வந்து தந்திடுவேன். இப்போ எனக்கு வருமானம் வருமானே தெரியாத நிலையில் எப்டி அவங்ககிட்ட போயி் கேட்கிறது?” என்கிறார் பரிதாபமாக.
“கல்யாணத்திலயும், கோவில்லயும் கேட்ட இந்த மங்களகரமான இசை இன்னிக்கி வீதிக்கு வந்துட்டாலும் அதுக்குரிய மரியாதையை நாம குடுத்தே ஆகணும் ” என்று கூறுகிறார் அவ்வப்போது சரவணனுக்கு தேவையானதை வழங்கி உதவி செய்து வரும் வேடசந்தூரை சேர்ந்த மளிகைக்கடைக்காரர் பாண்டி.
கொரோனா படைக்கும் கொடுமைகளில் இன்னும் வரப்போகிறதோ?.
– லெட்சுமி பிரியா