சென்னை:
தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்க, தமிழக காவல் துறையினர் சார்பில் ஒருநாள் சம்பளம் நிதியாக வழங்கப்பட்டது. அந்த நிதியை திருப்பி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடியார் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிக்காக தமிழக காவல்துறை சார்பில் வழங்கிய ஒரு நாள் ஊதியத்தை அவர்களுக்கே திருப்பி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழக அரசு சார்பில் நிதி கோரப்பட்டது. இதையடுத்து, பெரு நிறுவனங்கள் உள்பட சிறு குழந்தைகள் வரை நிதிகளை வாரி வழங்கினர். மேலும், அரசு ஊழியர்களான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்கினர்.
இந்த நிலையில், அர்ப்பணிப்பு உணர்வோடு ஓய்வில்லாமல் உழைத்து வரும் காவலர்களுக்கு அவர்கள் வழங்கிய நிதியை திருப்பி வழங்க வேண்டுமென்று டிஜிபி திரிபாதி அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
அதன்படி, காவலர்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு நாள் ஊதியமான 8 கோடியே 41 லட்சத்து 37 ஆயிரத்து 286 ரூபாய் மீண்டும் அவர்களுக்கே வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.