சென்னை: தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கிண்டியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்து வரும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விரைந்து சென்று நேரில் ஆய்வு செய்தார்.
நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இது கொரோனாவின் 2வது அலை என்று கூறப்படுகிறது. மேலும் உருமாறிய கொரோனா வைரசும்த பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதுடன், கொரோனா நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கிண்டியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பயிற்சி நிலையத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில், முதல்கட்டமாக 150 பேருக்கு எடுக்கப்பட்ட மாதிரியில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மற்றவர்களின் சோதனை முடிவுகள் நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயிற்சி மையத்தில் பணியாற்றி வரும் ஆவடிப்பகுதியைச்சேர்ந்த நபர் மூலம் கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் , சென்னை மாநகராட்சி சுகாதார இணை ஆணையர் ஆல்பி ஜான், மாநகர சுகாதார அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் இதனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், அந்த நிறுவனத்தை மூடி, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து, பின்னர் திறக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அந்நிறுவன அதிகாரிகள், நிறுவனத்தை உடனே மூட முடியாது என கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உளளது.