சென்னை

மிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் பேருந்துகளில் செல்ல தயக்கம் காட்டுவதால் குறைவான பயணிகள் பயணம் செய்கின்றனர்.

தற்போதைய ஊரடங்கில் பல விதிகள் தளர்வு  செய்யப்பட்டுள்ளன.  அவ்வகையில் தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை இயக்கி வருகிறது.   சுமார் 8000 பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இந்த பேருந்துகளின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆகியோரின் உடல் வெப்பநிலை, தெர்மல் ஸ்கேன் சோதனை ஆகியவை நடத்தி முகக் கவசங்களுடன் பணி புரிகின்றனர்,  பேருந்துகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப் படுகிறது.  ஆயினும் கொரோனா அச்சத்தால் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்யத் தயங்குகின்றனர்

இது குறித்து ஒரு போக்குவரத்துக் கழக அதிகாரி, ”நாங்கள் முழுக்க அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளை இயக்கி வருகிறோம்.  பேருந்துகளில் 60% பயணிகளை ஏற்றுச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.  அதன்படி குறைந்தது 30 பேர்கள் வரை பயணம் செய்யலாம் என்றாலும் சராசரியாக ஒவ்வொரு பேருந்திலும் சுமார் 20 பேர் வரை மட்டுமே பயணம் செய்கின்றனர்.

மக்களுக்கு இன்னும் கொரோனா அச்சம் உள்ளதால் வெளியூர் பயணத்தைத் தவிர்த்து வருகின்றனர்.   அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதால் பேருந்துகள் குறைவான பயணிகளுடன் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.