விருத்தாசலம்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த நிலையில், அவரை, கொரோனா பரிசோதனைக்கு வர சுகாதார்துறையினர் அழைப்பு விடுத்தது சர்ச்சையானது. இதனால் கோபமடைந்த பிரேமலதா, வரமுடியாது என்று கூறிவிட்டு சென்றார்.
அமமுகவுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, மாநிலத்தில் 60 தொகுதிகளில் களமிறங்கி உள்ளது. விருத்தாசலம் தொகுதியில், தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா போட்டியிடுகிறார். இதனால் விருத்தாச்சலத்தில் அவர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். விருத்தாச்சலம் அருகே பரப்புரைக்கு சென்ற இடத்தில் கொரோனா பரிசோதனைக்கு வருமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே, பிரேமலதாவுடன் தொடர்பில் இருந்த அவரது தம்பியான எல்.கே.சுதீஷுக்கும், அவரது மனைவி பூர்ணிமாவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால், பிரேமலதாவுக்கும் கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தில், கொரோனா நெறிமுறைகளின்படி, குடும்பத்தில் யாருக்காவது கொரோனா வந்திருத்தால் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதால், பிரேமலதாவை சுகாதாரத்துறை அதிகாரிகள், கொரோனா சோதனை செய்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனால் கோபம் அடைந்தா பிரேமலதா, கொரோனா சோதனைக்கு மறுப்பு தெரிவித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
ஒருவேளை பிரேமலதாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அவருடன் செல்லும் நூற்றுக்கணக்கானவர்களும், கொரோனாவின் பிடியில் சிக்க நேரிடும் என்பதை மறந்துவிடக்கூடாது.