டில்லி

கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் 17.4 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஊரடங்கையும் மீறி கொரோனா வைரஸ் தாக்குதல் அதிக அளவில் உள்ளது.   கடந்த 24 மணி நேரத்தில் 11,320 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை3,09,603 ஆக உயர்ந்துள்ளது.  நேற்று மட்டும் 389 பேர் உயிர் இழந்து மொத்தம் 8890 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7259 பேர் குணம் அடைந்து மொத்தம் 1,54,231 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மத்திய சுகாதார அமைச்சக செயலர் நேற்று நடத்திய காணொளி சந்திப்பில், “கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது கொரோனா நோயாளிகள் இரட்டிப்பாகும் காலம் 3.4 தினங்களாக இருந்தது.   தற்போது அது 17.4 நாட்களாக அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் தனிமைப்படுத்தல், சோதனை, சிகிச்சை ஆகிய நடவடிக்கைகளாகும்   தற்போது சுகாதார உட்கட்டமைப்பு, மருத்துவ மேலாண்மை ஆகியவை மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது

அதிகம் பாதிப்புள்ள பகுதிகளில் வீட்டுக்கு வீடு சோதனை செய்வதன் மூலம் ஆரம்பக் கட்டத்தில் பல நோயாளிகள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  இதனால் பரவுதல் வெகுவாக குறைந்து வருகிறது.  அனைத்து மாநில் அரசுகளும் இதற்காகப் பயிற்சி பெற்ற ஊழியர்கள் மற்றும் சரியான போக்குவரத்து வசதிகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றன.

இரட்டிப்பாகும் காலம் அதிகரித்தது மட்டுமின்றி குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.   தற்போதைய நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 49.47% ஆக உள்ளது.  இது ஒரு நல்ல அறிகுறி ஆகும்.

இதைப் போல் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.   இது வரை 877 பரிசோதனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதில் 637 அரசு மற்றும் 240 தனியார் நிலையங்களாகும்.  மொத்தம் 53,63,445 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 1,50,305 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.