சென்னை:
மிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று மட்டும் மாநிலத்தில் 30,744 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டயறிப்பட்டுள்ளது.

சென்னையில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ள போதிலும், பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் உயர்ந்து வருவதால் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பும் உயர்கிறது.

இதனிடையே கொரோனா பாதிப்பு வரும் காலத்தில் அதிகரித்தால் அதைச் சமாளிக்கத் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அவசர ஆக்சிஜன் படுக்கை வசதிகளை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் டிசம்பரில் 100இல் ஒருவருக்கு என்கிற விகிதத்தில் இருந்த இறப்பு விகிதம், தற்போது 1000இல் ஒருவர் என்கிற விகிதமாகக் குறைந்துள்ளது. அதேபோல 2வது அலையின் போது 500 மெட்ரிக் டன் என்ற அளவில் இருந்த ஆக்சிஜன் தேவை, இப்போது 117 மெட்ரிக் டன் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது.

சென்னையில் கொரோனா தாக்கம் உச்சத்தைத் தொட்டு, இப்போது குறையத் தொடங்கியுள்ளது. பாசிட்டிவ் விகிதம் 30%இல் இருந்து தற்போது 20ஆக குறைந்துவிட்டது. இருப்பினும், சில பகுதிகளில் குறிப்பாக சோளிங்கநல்லூர் மணலி, அம்பத்தூர் மாதவரம் ஆகிய மண்டலங்களில் தொற்றைக் குறைப்பதில் சவாலாக உள்ளது. சென்னையைப் பொருத்தவரை தொற்று குறைவதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கிய காரணம். சென்னை மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றியதால் வைரஸ் பாதிப்பு வேகமாகக் குறைக்க முடிந்தது.

அதேபோல மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தாக்கம் குறையத் தொடங்க வேண்டும். அப்போது தான் கர்நாடகாவைப் போலவே வார இறுதி ஊரடங்கைக் கைவிடுவது பற்றி முடிவெடுக்க முடியும்” என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பைக் குறைக்கக் கடந்த 3 வாரங்களாக ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.