சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று குழந்தைகள் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 1,818 ஆண்கள், 1,239 பெண்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 60 வயதுக்கு மேற்பட்ட 5 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நேற்று பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 844 பேரும், கோவையில் 280 பேரும், செங்கல்பட்டில் 186 பேரும் குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 6 பேரும், பெரம்பலூரில் 5 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 7 லட்சத்து 3 ஆயிரத்து 250 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 4 லட்சத்து 24 ஆயிரத்து 529 ஆண்களும், 2 லட்சத்து 78 ஆயிரத்து 689 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 32 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 25 ஆயிரத்து 76 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 86 ஆயிரத்து 99 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 20 பேரும், தனியார் மருத்துவமனையில் 13 பேரும் என 33 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 858 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 4 ஆயிரத்து 262 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,308 பேரும், செங்கல்பட்டில் 282 பேரும், கோவையில் 273 பேரும் அடங்குவர். இதுவரையில் 6 லட்சத்து 59 ஆயிரத்து 432 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 32 ஆயிரத்து 960 பேர் உள்ளனர். தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 66 அரசு நிறுவனங்களிலும், 132 தனியார் நிறுவனங்களிலும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 90 லட்சத்து 99 ஆயிரத்து 203 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று 80 ஆயிரத்து 51 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 18 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையிலும் ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்புகள் பதிவாகிறது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கு தளர்வால் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அப்போது பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் கண்டறிந்து அந்த தெருக்களுக்கு சீல் வைத்தனர்.

அந்த வகையில் அதிகபட்சமாக 70 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் குறைந்துள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் 5 தெருக்களும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2 தெருக்களும், ராயபுரம் மண்டலத்தில் 5 தெருக்களும், அண்ணாநகர் மண்டலத்தில் ஒரு தெருவும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2 தெருக்களும், கோடம்பாக்கம், அடையாறு, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் தலா ஒரு தெருவும் என 18 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.