சென்னை: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசிக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள 3 குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வரும்  27ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, அவர்கள் விடுதலையை வரவேற்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியினர், மன்னார்குடி வகையறாக்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

இந்த நிலையில், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பிசிஆர் சோதனை மற்றும் ஸ்கேன் சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சசிகலாவுக்கு கொரோனா உறுதியானதைத்யடுத்து, இளவரசிக்கும் கொரோனா சோதனை நடத்த வேண்டும் என அவரது உறவினர்களும், வழக்கறிஞர்களும் சிறைத்துறைக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.  அதன்படி, நேற்று மாலை இளவரசிக்கும் ஆர்டி-பிசிஆர் , ஸ்கேன் உள்பட சோதனைகள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இளவரசிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.  அதன் காரணமாக, இளவரசியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார் என கூறப்படுகிறது.