தாலி கட்டியதும்  ’’கொரோனா’’ தொற்று தெரியவந்த மாப்பிள்ளை..

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும், விருதுநகரில் உள்ள ஆர்.ஆர்.பகுதியைச் சேர்ந்த பானு என்பவருக்கும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பே திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஊரடங்கு காரணமாகத் திருமணம் தள்ளிக்கொண்டே போனது.

தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு, போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இருவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்யாண தேதி குறிக்கப்பட்டது.

தாம்பரத்தில் இருந்து  மணமகன் மற்றும் அவரது குடும்பத்தார் விருதுநகர் புறப்பட்டுச் சென்றனர்.

மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் மணமகனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் திருமணகோஷ்டியினர் ஊருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நிச்சயித்தபடி, ஞாயிறு அன்று திருமணம் நடந்து முடிந்தது.

கொஞ்ச நேரம் கழித்து, திருமண வீட்டுக்கு வந்த சுகாதார அதிகாரிகள், மாப்பிள்ளைக்கு, கொரோனா தொற்று இருப்பதாகக் குண்டு தூக்கிப் போட்டனர்.

பின்னர் அந்த மாப்பிள்ளையை, கையோடு அழைத்துச் சென்று மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

திருமணத்தன்று மணமகன் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.