சென்னை: தமிழகத்தில் கொரோனா சோதனை அதிகம் மேற்கொள்ள இருப்பதால்,  கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் 2000ஐ தாண்டும், அதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், அனைவரும்  மாஸ்க் அணியுங்கள் என தமிழக  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரேனா பாதிப்பு மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.  இதுவரை 8,73,219 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12,641  பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 850,091பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.  தற்போதைய நிலையில், 10,487 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று  ஒரே நாளில், தமிழகம் முழுவதும்  1,779 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக சென்னையில் 664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அந்த  வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது:

மக்கள் மாஸ்க் போடுவதை மறந்ததால் தான் கொரோனா பரவல் அதிகரிப்புக்கு காரணம், அ தனை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம், தற்போதைய கொரோனா அதிகரிப்புக்கு வெளிநாட்டு கொரோனா காரணம் இல்லை, தமிழகத்தில் இரட்டை உருமாறிய கொரோனா இதுவரை கண்டறியப்படவில்லை என்றவர், அறிகுறி இருந்தால் சுய மருத்துவம் செய்யாமல் மருத்துவமனையை அணுக வேண்டும்.

தமிழக நகரங்களில் 1.22 லட்சம் தெருக்களில் 3,960ல் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், 1.28 லட்சம் கிராமப்புறங்களில் சுமார் 2 ஆயிரம் கிராமப்புறங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு செயல்படுத்த வாய்ப்பில்லை என்றவர்,  அரசியல் பிரச்சார கூட்டம் மற்றும் பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதை  அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றவர்,  அரசு விடுமுறைகளை மீறி பள்ளி, கல்லூரிகளை நடத்துபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 25 லட்சம் கொரோனா தடுப்பூசி பயன்படுத்தியுள்ளோம். இன்னும் 10 லட்சம் தடுப்பூசி ஏப்ரல் முதல்வாரத்தில் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.