சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த, கோவிட் கேர் மையங்களை மீண்டும் திறக்க ஆட்சியர்களுக்கு, தமிழக சகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
மாநில தலைநர் சென்னையில் நாளுக்கு தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது தேர்தல் காலம் என்பதால், கட்சி கூட்டங்களுக்கு மக்கள் கூட்டப்படுவது அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்பட , அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கடைகள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் விதிமீறல் நடந்தால் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் கூடும் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
தொற்று பாதித்தவரை கண்டறிந்ததும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
தொற்று பரவியதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும்.
தொற்று பாதித்தவரின் வீடுகளில் தகரம் அடைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஒரு தெருவில் மூன்று நபர்களுக்கு மேல் தொற்று கண்டறியப்பட்டால் அங்கு கிருமி நாசினி தெளிப்பதுடன் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எச்சரிக்கை வாசகங்கள் மட்டும் ஒட்டியிருப்பது போதுமானதல்ல.
சுப நிகழ்ச்சிகள் விடுதிகள் பயிற்சி மையங்களில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து நிறுவனங்களிலும் வெப்ப பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.
காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்து தொற்றில்லை சான்று அளித்தால் மட்டுமே அவரை மீண்டும் அலுவலகத்தில் அனுமதிக்க வேண்டும்.
சென்னை, கோவை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
எனவே அனைத்து மாவட்டங்களிலும் ‘கோவிட் கேர்’ மையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் .
இந்த மாதம் மிகவும் சவாலான காலம் என்பதால் வரும் நாட்களில் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார துணை இயக்குனர்கள் தீவிரப்படுத்த வேண்டும்.
தடுப்பு நடவடிக்கை குறித்த அறிக்கையை சுகாதாரத்துறைக்கு தினமும் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.