டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், தொற்று பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்டநடவடிக்கை குறித்து 12 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. நேற்று இதுவரை இல்லாத அளவில் 1,29,26,061 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டது.
தொற்று பரவல் அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, டெல்லி,, ஜார்க்கண்ட் மற்றும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகமுள்ள மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கேரளா, டெல்லி, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், உத்தரப்பிரேதசம், கர்நாடகா, குஜராத் மற்றும் பஞ்சாப் உள்பட 12 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
ஏற்கனவே கடந்த இரு நாட்களுக்கு முன்பு 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியான வாரங்களாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.