சென்னை:
மிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த நிலையில், தற்போது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற தென் மாவட்டங்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா  பாதிப்புக்கு இதுவரை  71 பேர் பலியான நிலையில்,  10ஆயிரத்து  108 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அதிகப்பட்சமாக சென்னையில் மட்டும் 5ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு முதல்கட்டமாக தப்லிகி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என அறியப்பட்டது. இதனால் சென்னை உள்பட பல தென் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.  அவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று, கொரோனா குணமான நிலையில்,  பல மாவட்டங்கள் சற்றே நிம்மதி அடைந்தன.
ஆனால், 2வது கட்டமாக கோயம்பேடு மார்க்கெட் மூலம் பரவிய கொரோனா சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்ட மக்களை மீண்டும் துன்புறுத்தி வருகிறது.
இதற்கிடையில் ஊரடங்கு தளர்வு காரணமாக வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புபவர்களால் இதுவரை கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு வந்த பல மாவட்டங்கள் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளன.
மும்பை போன்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலர் தென் மாவட்டங்களுக்கு திரும்பிய நிலையில் அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.  நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 176 ஆக உயர்ந்து உள்ளது.
இவர்களில் 41 பேர் மகாராஷ்டிரா, குஜராத் என பிற மாநிலங்களிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் ஆவர். சொந்த ஊர் திரும்புபவர்களை மாவட்டத்துக்குள் நுழைவதற்கு முன்பாகவே கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்துகின்றனர்.
மேலும்,  தென்காசி மாவட்டத்திலும் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.  இதனால் தென்காசியில் மொத்த பாதிப்பு 60 ஆக உயர்வடைந்து உள்ளது.
தூத்துக்குடியில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களால் புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. தற்போதைய நிலையில் 14 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 7 ஆயிரம் பேர் ஊர் திரும்பியுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.