சென்னை: 1,373 தெருக்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், சென்னையின் பல பகுதிகள் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. 3 பேருக்கு பேல் பாதிப்புள்ள தெருக்கள் கொரோனா கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா, சமீப நாட்களில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்காததால், தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மகாராஷ்டிரா உள்பட சில மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஆந்திரா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று 567 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 251 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், சென்னையில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்து 36ஆயிரத்து 978 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் சென்னையில் மட்டும் 1,373 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இவற்றில், 1,269 தெருக்களில் தலா ஒஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், , 74 தெருக்களில் தலா 2 பேரும், 20 தெருக்களில் தலா 3 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
10 தெருக்களில் 3 மேற்பட்டவர்களும் கொரோனாவால் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால், ஒரு தெருவில் 3 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருந்தால் கட்டுப்பாட்டு பகுதியாக மாறும் என்று சென்னை மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.