‘பார்த்த ஞாபகம் இல்லையோ?’ பதற வைத்த கொரோனா நோயாளி..
செங்கல்பட்டு மாவட்டம் பட்டாளம்.
அங்கே உள்ள லாரிகள் பணிமனையில், ஊரடங்கு காரணமாக வாகனங்கள் ஓடாததால், நான்கைந்து லாரி ஓட்டுநர்கள் ஒரு வாரமாக உண்டும் உறங்கியும் பொழுதைக் கழித்து வந்தனர்.
ஒருவருக்கொருவர் பரிட்சயம் கிடையாது.
நேற்று காலை சீக்கிரமாகவே கண் விழித்த வட மாநில லாரி டிரைவர், பராக்கு பார்த்துக் கொண்டிருந்தார்.
சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர், அந்த டிரைவரை துணுக்குறச்செய்தது.
தன்னுடன் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் புகைப்படத்துடன் அந்த போஸ்டரில் ஏதோ வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
அந்த டிரைவர், தற்குறி என்று தெரிகிறது.
மற்றொரு லாரி டிரைவரை (அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்) எழுப்பி, ‘இந்த போஸ்டரை பார்’’ என்று தெரிவித்துள்ளார்.
அந்த தமிழக டிரைவர் போஸ்டரை பார்த்து பதறிப்போனார்.
பக்கத்தில் தூங்குபவரும், போஸ்டரில் காணப்படுபவருமான இளைஞர், ஒரு கொரோனா நோயாளி என்பதும், அவரை இந்தியா முழுக்க போலீசார் தேடி வருவதும் தெரிய வந்தது.
அப்புறம் என்ன நடந்தது?
போஸ்டரில் கொடுக்கப்பட்டிருந்த டெலிபோன் எண்ணுக்கு போன் செய்தார், தமிழக டிரைவர்.
போலீசார் விரைந்து வந்து, கொரோனா நோயாளியை தூக்கிக்கொண்டு போனார்கள்.
அவருடன் நான்கு நாட்கள் பொழுதைக் கழித்த. நான்கு டிரைவர்கள், கொரோனா பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போஸ்டரில் போஸ் கொடுத்த கொரோனா நோயாளி, டெல்லியைச் சேர்ந்தவர்
புதுச்சேரிக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தார்.
அங்கிருந்து விழுப்புரம் வந்து, ஊரடங்கு காரணமாக ஒரு முகாமில் தங்கி இருந்தார்.
காய்ச்சல் ஏற்பட்டதால், விழுப்புரம் . மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்குள் அவரை , தவறுதலாக அங்கிருந்து வெளியே அனுப்பி விட்டார்கள்.
அதன்பிறகே அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது.
முகாமுக்குச் சென்று தேடினால், ஆள் ‘மிஸ்ஸிங்’.
வேறு வழியின்றி போஸ்டர் ஒட்டி தேடிய போதுதான், பட்டாளத்தில் மாட்டிக்கொண்டார், அந்த டெல்லி வாலா.
– ஏழுமலை வெங்கடேசன்
–