நெல்லை:
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மதபோதனை கூட்டத்தில் பங்கேற்ற நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 22 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி உறுதியாகி உள்ளதால், அந்த ஊரே சீல் வைக்கப்பட்டு உள்ளது. இது நெல்லை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நடவடிகையில் தமிழக்ம தீவிரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக நோய்தொற்று பரவல் தடுக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று முதல் நோய்தோற்று விவகாரம் பூதாகரமாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று 3வது கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் வெளிப்பட்டு வருகிறது. இதற்கிடையில் டெல்லி மதபோதனை கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஏராளமானோருக்கு நோய் தொற்று இருப்பது தற்போது வெளிப்பட்டு வருகிறது.
நெல்லை அருகே உள்ள மேலப்பாளையம் பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இங்குள்ள பலர் டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய நிலையில், நேற்று ஒரே நாளில், அவர்களில் 22 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், நெல்லை மேலப்பாளையம் சீல் வைக்கப்பட்டு உள்ளது.
அந்த ஊரைச் சேர்ந்த மக்கள், வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, வெளியில் இருந்து யாரும் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மற்ற பகுதிகளிலிருந்து மேலப்பாளையம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி கலெக்டர் ஷில்பா பிரகாஷ் சதீஷ் உத்தரவின் பேரில், போலீஸ் கமிஷனர் தீபக் தமோரின் ஆணைப்படி, மேலப்பாளையம் பகுதி, நகரத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது. இந்த தனிமை உத்தரவு, ஏப்ரல் 14ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலப்பாளையம் செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியிலிருந்து வெளியேயும், வெளியில் இருந்து அப்பகுதிக்கும் மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் அப்பகுதியில் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் சேவையை அப்பகுதி மக்களுக்கு கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை மேற்கொண்டுள்ளது. மக்கள், தேவையில்லாமல், வெளியே வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் மக்கள் சமூக விலகலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மேலப்பாளையத்தில், வாகனங்களின் இயக்கம் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டுமே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ சோதனைகளுக்காக வெளியே வரும் மக்கள், அதற்கான தகுந்த ஆவணங்களை கைவசம் வைத்திருக்க வேண்டும். இதற்காக தனியாக ஒரு பதிவேடு வைக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முடிந்து திரும்பும் மக்கள் அதில் பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும்.
மேலப்பாளையம் பகுதியில் போதிய அளவில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சோதனை சாவடிகளில், போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் ஷில்பா பிரகாஷ் சதீஷ் தெரிவித்துள்ளார்.