வாஷிங்டன்

நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77000ஐ கடந்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது.   இங்கு இதுவரை சுமார் 37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 1,41,000க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.  கடந்த ஜூன் 10 ஆம் தேதிக்குப் பிறகு நேற்று அதிக அளவில் பாதிப்பு மற்றும் மரணம் நிகழ்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 77000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000ஐ நெருங்கி வருகிறது.  பல இடங்களில் மருத்துவமனைகளில் இடம் இல்லாததைப் போல் இறந்த உடல்களை அடக்கம் செய்யவும் இடப்பற்றாக்குறை நிலவுகிறது.

டெக்ஸாஸ் மற்றும் அரிஸோனா மாகாணங்களில் அனைத்து கல்லறைகளும் நிரம்பி விட்டதால் சடலங்கள் குளிரூட்டப்பட்ட அறைகளில் வைக்கப்படுகின்றன.  ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் தினசரி 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பிறகு 1300 ஆகக் குறைந்து 800 ஆன நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக அமெரிக்க மக்கள் பள்ளிகளைத் திறக்க வலியுறுத்தி வருகின்றனர்.   பலரும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது இல்லை..  இவற்றால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.