டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 3வது அலை பரவத்தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேற்குவங்கம், மகாராஷ்டிரா, கேரளாவில் 3வது பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதற்கிடையில், கொரோனா 3வது அலை 1-10 வயது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோன பரவல் குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தலைமையில் மருத்துவ வல்லுநர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கொரோனா தாக்கம் குறித்த தரவுகளைக்கொண்டு விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, கொரோனா 2வது அலை தீவிரமாக பரவிய காலக்கட்டமான மார்ச்சில் மொத்த கோவிட் பாதிப்புகளில் 2.80% ஆக இருந்த குழந்தைகள் பாதிப்பு எண்ணிக்கை, கடந்த மாதம் (ஆகஸ்ட்டு) 7.04% ஆக அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. அதாவது 100 பேரில் 7 பேர் குழந்தைகள் என்றும், ஆனால் அதற்காக அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்து உள்ளது. இருந்தாலும் 3வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.
கடந்த மார்ச் 2021-க்கு முன்பாக ஜூன் 2020 முதல் பிப்ரவரி 2020 வரையிலான 9 மாதங்களில் 1-10 வயதுடைய குழந்தைகளை கொரோனா தொற்றுவது என்பது மொத்த பாதிப்புகளில் 2.72% லிருந்து 3.59% ஆக மட்டுமே இருந்தது.
18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் குழந்தைகள் பாதிப்பு கோவிட் எண்ணிக்கைகளின் படி மிஜோரமில் மொத்த பாதிப்புகளில் 16.48% 10 வயதுக்கும் கீழான குழந்தைகளாவர். டெல்லியில் ஆகக்குறைவாக இது 2.25% ஆக உள்ளது. மேகாலயாவில் 9.35%, மணிப்பூரில் 8.74%, அந்தமான் நிகோபார் தீவுகளில் 8.2%, சிக்கிமில் 8.02%, கேரளாவில் 8.62%, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் 7.69%, அருணாச்சலப் பிரதேசத்தில் 7.38%, தேசிய சராசரி 7.04% என்று 1-10 வயதுடைய குழந்தைகளை கொரோனா பாதிக்கும் எண்ணிக்கைகள் உள்ளன.
தேசிய சராசரியைக் காட்டிலும் குறைவாக குழந்தைகளை பாதிக்கும் மாநிலங்களில் புதுச்சேரி (6.95%), கோவா (6.86%), நாகாலாந்து (5.48%) அசாம் (5.04%), கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா, திரிபுரா, டெல்லி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குழந்தைகளை கொரோனா பாதிப்பதில் தேசிய சராசரியைக் காட்டிலும் குறைவாகவே பாதிக்கிறது.
இருந்தாலும் சமீப நாட்களில், கொரோனா பாதிப்பினால் குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் முன்பை விட எச்சரிக்கை உணர்வு அதிகமாகவுள்ளது அதே போல் பாதிக்கக்கூடிய நிலையில் குழந்தைகள் இருப்பதும் அதிகரித்துள்ளது.
செரோ சர்வேயின்படி குழந்தைகளில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 57-58% ஆக இருப்பதாக இன்னொரு தகவல் தெரிவிக்கின்றது. பெரியோர்கள் கொரோனாவினால் பாதிப்படைவது குறைவதால் குழந்தைகளை பாதிக்கின்றது என்கிறது ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.