சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் (15ந்தேதி)  256 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய (16ந்தேதி) பாதிப்பில் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை. ஆனால்,  நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையில், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 8,449 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,71,384ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 2,636 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு  13,032 பேர் பலியாகி உள்ளனர்.  தற்போது மருத்துவமனையில் 61,593 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு கொரோனா பரவலின்போது, முதியோர், இணைநோய் உள்ளவர்கள் மட்டுமே அதிகமாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பரவி வரும் கொரோனா வின் 2வது அலை அனைத்து தரப்பினரையும் பாடாய்படுத்தி வருகிறது. இதுமட்டுமின்றி,  உருமாறிய நிலையில், எந்தவித அறிகுறியும் இன்றியும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  இந்த பாதிப்புக்கு,  குழந்தைகளும் விதிவிலக்கல்ல என்பது தற்போது வெளியாகியுள்ள புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.

குழந்தைகளுக்கு பரவும் கொரோனாவால், பல்வேறு நோய் அறிகுறிகள் ( காய்ச்சல் , மூக்கடைப்பு , வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற அறிகுறிகள் உள்ளதாகவும்,  வும் 1 – 8 வயதுள்ள குழந்தைகள் கொரோனாவால் இந்தாண்டு அதிகம் பாதித்துள்ளதாகவும், இது கடந்தாண்டை விட பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுதொடர்பாக டெல்லியில் ஆய்வு நடத்தப்பட்டது. கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் பற்றிய சோதனை ஜனவரி 15 முதல் ஜனவரி 23 வரை 28,000 நபர்களிடம் நடத்தப்பட்டது.  இதில் 5 வயதிலிருந்து 12 வயதுக்கு உட்பட்ட 1,307 குழந்தைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அங்கு  ஐந்தாவது சுற்று செரோலாஜிகல் சோதனையின்  போது கணக்கெடுக்கப்பட்ட குழந்தைகளில் குறைந்தது 50 சதவீதம் பேர் கொரோனாவுக்கு  எதிராக ஆன்டிபாடிகள்  பெரியவர்களுக்கு நிகராக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐந்து வயதுக்கு குறைவானவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், குழந்தை மூன்று நாட்களுக்கு அப்பால் அதிக காய்ச்சல், எரிச்சலூட்டுதல், சாப்பிட மறுத்தல், சுவாசக்கோளாறு  அல்லது கடுமையான வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், குழந்தையை உடனடியாக மருத்துவரை விரைவில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘15ந்தேதி தமிழகஅரசு வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு தகவலில்,  பாதிப்புக்குள்ளான 7,987 பேர்களில் 256 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிப்பிற்குள்ளாகியுள்ள ஐந்து மாநிலங்களில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை 79ஆயிரத்து 688குழந்தைகள் பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 60ஆயிரத்து 884 குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.  இவர்களில்  9ஆயிரத்து 882குழந்தைகள் ஐந்து வயதிற்கு உட்பட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில்  5ஆயிரத்து 940குழந்தைகள் பாதிக்கப்பட்ட சூழலில், 922பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில்,  7ஆயிரத்து 237 குழந்தைகளும், உத்தரப் பிரதேசத்தில் 3ஆயிரத்து நான்கு குழந்தைகளும், டெல்லியில் 2ஆயிரத்து 733குழந்தைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளும்,  பெரியவர்கள் கடைப்பிடிப்பதைப் போலவே அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும்  கடைப்பிடிக்க பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில்,  தற்போது சொதனை அளவிலேயே உள்ளது. இந்த நிலையில், தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளும் அதிகரித்து வருவது பெற்றோர்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது.