சென்னை,
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் பவள விழா சென்னையில் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, முரசொலி அலுவலகத்தில் பவள விழா அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.
கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காட்சி அரங்கை தி ஹிந்து ஆங்கில நாளிதழ் குழுமத் தலைவர் என்.ராம், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் திறந்து வைத்தார்.
முரசொலி பவளவிழா காட்சியரங்கில் திமுக தலைவர் கருணாநிதி அமர்ந்திருப்பது போன்ற மெழுகு சிலை மற்றும் புகைப்பட கண்காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
அதைத்தொடர்ந்து இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் பவள விழா நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, நடிகர் கமல்ஹாசன், இந்து ராம், தினத்தந்தி அதிபர் பாலசுப்ரமணிய ஆதித்தன், தினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன், தினமலர் ஆசிரியர் ரமேஷ், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆசிரியர் அருண்ராம், டெக்கான் க்ரானிக்கல் ஆசிரியர் பகவான் சிங், ஆனந்த விகடன் குழுமம் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன், நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், தினகரன் செய்தி ஆசிரியர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றர்.
நாளை மாலை முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ விளையாட்டுத் திடலில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை வகிக்கிறார்.
இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், எம்ஜிஆர் கழகம் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.