சென்னை:

சிறுவர்களின் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில், சென்னையில் 12 இடங்களில் சிறுவர்களுக்கு ஆலோசனை வழங்க சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.

சட்டத்திற்கு முரணாக செயல்படும்  சிறார்களை கண்டறிந்து, அவர்களுக்கு சமூகத்தில் வாழும் வகையில்  மறுவாழ்வு செய்து மீண்டும் ஒன்றிணைக்கும் நடவடிக்கையில், நகரத்தில் உள்ள 12 இடங்களில் இதுபோன்ற குழந்தைகளை சந்தித்து ஆலோசனை வழங்க மாநகர போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் இளம் குற்றவாளிகள் தொடர்பாக எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில்,  “நகரத்தில் பெரும்பாலான சிறார் குற்றவாளிகள் இருப்பதுதெரிய வந்துள்ளதாகவும், அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி, நல்வழி படுத்த இருப்பதாகவும், துணை போலீஸ் கமிஷனர் எச். ஜெயலட்சுமி (பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்திற்கு எதிரான குற்றங்கள்) தெரிவித்து உள்ளார்.

ஒட்டேரி, நடுகுப்பம், தாமஸ் சாலை மற்றும் கோருக்குப்பேட்டை  பகுதிகளில் உள்ள குழந்தைகளில், குறைந்தது 100 குழந்தைகள் இந்த பகுதிகளில் வசிப்பதாகவும்,  “நாங்கள் இந்த குழந்தைகளுக்கு தனித்தனியாக ஆலோசனை வழங்குவோம்,  இதற்காக 12 இடங்களில் ஆலோசனை மையம் அமைக்கப்பட இருப்பதாகவும், அங்கு  அவர்கள் ஒவ்வொரு வருக்கும் அவர்களின் மறுவாழ்வு, கல்வி மற்றும் சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவது குறித்து நெருக்கமாகப் பின்தொடர தனித் திட்டத்தை உருவாக்குவோம் என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும்,  இந்த குழந்தைகள் யாரும் மீண்டும் குற்றவாளிகளாக மாறாமல் இருப்பதை  நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம், ”என்று கூறியவர்,  அரசாங்க கண்காணிப்பு இல்லங்களிலிருந்து விடுவிக்கப்படும் இளம் குற்றவாளிகளுக்கு உளவியல் மற்றும் மனநல ஆலோசனைகளை கொடுக்க உள்ளதாகவும், தொழில்முறை படிப்புகளை எடுக்க விரும்பினால், அதற்கான  நிறுவனங்களுடன் இணைக்கப்படுவார்கள், மேலும் படிக்க விரும்புவோர் பள்ளிகளில் படிக்கப்படுவார்கள் என்று தெரிவித்து உள்ளார்.

“மற்றவர்களுடன் சமமாக கல்வியைப் பெறுவது அவர்களின் உரிமை. சேர்க்கை மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம், ” என்று கூறிய, துணை போலீஸ் கமிஷனர் எச். ஜெயலட்சுமி  சிறுவர் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 இன் படி, ஒவ்வொரு சிறார் குற்றவாளியும் தண்டனையை நிறைவு செய்தபின், தனிப்பட்ட குழந்தை பராமரிப்பு திட்டங்களைத் தயாரிப்பது மற்றும் அவர்களின் வெற்றிகரமான மறுவாழ்வை உறுதி செய்வது சிறார் நீதி வாரியத்தின் கடமையாகும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.