ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக கட்சியைச் சேர்ந்த ஹர்ஷ் மகாஜன் வெற்றிபெற்றார்.

மொத்தம் 68 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஹிமாச்சல் சட்டமன்றத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், பாஜக கட்சிக்கு 25 உறுப்பினர்கள் உள்ளனர் தவிர 3 சுயேட்சைகள் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட அபிஷேக் மனு சிங்வி மற்றும் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் ஆகியோருக்கு தலா 34 ஓட்டுகள் கிடைத்தது.

இதனை அடுத்து நடைபெற்ற விசாரணையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்தது தெரியவந்தது. இவர்கள் தவிர சுயேட்சை உறுப்பினர்களும் பாஜக-வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

வேட்பாளர் இருவருக்கும் சமமான வாக்குகள் கிடைத்ததை அடுத்து குலுக்கல் முறையில் ஹர்ஷ் மகாஜன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்ததை அடுத்து மாநில அரசு பெரும்பான்மை இழந்ததாகக் கூறி காங்கிரஸ் அரசைக் கலைக்க பாஜக உறுப்பினர்கள் ஆளுநரிடம் முறையிட்டனர்.

அதேவேளையில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து ஆராய கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவக்குமார் தலைமையிலான குழுவை காங்கிரஸ் தலைவர் கார்கே ஹிமாச்சல் அனுப்பினார்.

இந்த நிலையில் ஹிமாச்சல் சட்டமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு கட்சி மாறி வாக்களித்த 6 எம்.எல்.ஏ.க்கள் வராத நிலையில் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இழந்ததாக பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அமளியில் ஈடுபட்ட 15 பாஜக உறுப்பினர்களை சட்டசபை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்ததை அடுத்து அம்மாநில அரசியல் களம் சூடு பிடித்தது.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்ததை வைத்து மற்ற மாநிலங்களில் ஆளும் கட்சியில் பிளவை ஏற்படுத்தி அரசியல் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கியது போன்று தனது சொந்த மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்திலும் செய்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா மேற்கொண்ட முயற்சி கைநழுவியது.

இதனை அடுத்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி இறங்கிய நிலையில் கொறடா உத்தரவை மீறி கட்சி மாறி வாக்களித்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறித்து சபாநாயகர் இன்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில் அபிஷேக் மனு சிங்வி தோல்விக்கு முழுபொறுப்பேற்று முதல்வர் சுக்கு தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார்.

தவிர, அரசுக்கும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே சுமூக உறவு இல்லை என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பிரதீபா சிங்-கும் குரலெழுப்பி வருகிறார்.

இதனை அடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் ஈடுபட்டுள்ளதை அடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த விக்ரமாதித்ய சிங் தனது ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், பதவி பறிக்கப்பட்ட 6 எம்.எல்.ஏ.க்களும் நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக உறுப்பினர்களும் ஒரு சில வாரங்கள் அவைக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இன்னும் ஓரிரு வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதற்குள்ளாக ஹிமாச்சல் பிரதேச அரசு கவிழ்வதற்கான வாய்ப்பு இல்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.