சிறுதானிய வரிசையில் மிகவும் சிறப்பாகப் பேசப்படுவது கேழ்வரகு எனப்படும் ராகி. பச்சிளம் குழந்தைகள் முதல் பல்லில்லாத முதியவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடிய வகையில் அமைந்திருப்பதே இதன் சிறப்பு ஆகும்.

இரும்புச் சத்தும் எராளமான கால்ஷியம் சத்தும் கொண்ட இந்தக் கேழ்வரகு, நீரிழிவு நோயாளி களுக்கு ஏற்ற மிகச் சிறந்த உணவாகும். அத்தகைய கேழ்வரகு மாவில் தயாரிக்கக்கூடிய ஒரு லட்டு செய்முறையை நாம் இப்போது பார்க்கலாம்.

கேழ்வரகு லட்டு செய்யத் தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு – 1 கப்

வெல்லம் – 200 கிராம்

வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 கைப்பிடி அளவு

ஏலக்காய்ப் பொடி – 1/4 தேக்கரண்டி

நெய் – 1 தேக்கரண்டி

செய்முறை

* வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு ஒரு கப் கேழ்வரகு மாவை மிதமான தீயில் மணம் வரும்வரை வறுத்துக்கொள்ளவும்.

* வெல்லத்தை அரைக் கப் தண்ணீர் விட்டு, சிறு கம்பிப் பதம் வரும்வரை காய்ச்சவும்.

* வறுத்த மாவில் ஏலக்காய்ப் பொடி, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்துவைக்கவும்.

* காய்ச்சிய வெல்லப்பாகை கைபொறுக்கும் பதத்தில் மாவில் கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

* சுவையான சத்தான கேழ்வரகு லட்டு தயார்.

* வளரும் குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்ற லட்டு இது.

– சுந்தரா