தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில், மதுரையில் நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், இந்த நூலகத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் என்றும் இதற்காக 99 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
நூலகம் அமையவிருக்கும் பகுதியில் உள்ள கட்டிடத்தில் ஆங்கிலேய பொறியாளரான ஜான் பென்னி குயிக் தங்கியிருந்தார் அதனால் அங்கு நூலகம் அமைவதற்கு அதிமுக-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து சட்டசபையில் குரலெழுப்பிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தென் மாவட்ட மக்களின் போற்றுதலுக்கு உரிய நபரின் நினைவிடத்தை இடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தார்.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி தென் மாவட்ட மக்களின் இதயங்களில் வாழும் ஜான் பென்னி குயிக் இந்த இடத்தில் வாழ்ந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பென்னி குயிக்-கின் வாரிசுகள் லண்டனில் இருந்து வெளியிட்டிருக்கும் வீடியோவில், எங்கள் மூதாதையரும் தாத்தாவுமான பென்னி குயிக் இந்த இடத்தில் இருந்தார் என்பதற்கான உறுதியான ஆதாரம் எங்களிடம் இல்லை.
ஒரு வேளை அவர் அந்த இடத்தில் வாழ்ந்திருந்தாலும், ஒரு பொறியாளராக அங்குள்ள மக்களின் கல்வி மற்றும் வாழ்க்கைத்தரம் உயரவே பாடுபட்டார்.
அதனால், இந்த இடத்தில் நூலகம் அமைவது அவருக்குச் சிறப்பு சேர்ப்பதாகவே இருக்கும், மேலும் இந்த நூலகத்திற்குத் தேவையான புத்தகங்களை தாங்கள் அன்பளிப்பாக வழங்கக் காத்திருப்பதாக அந்தக் காணொளியில் கூறியிருக்கின்றனர்.
இதன் மூலம், கலைஞர் நூலகம் குறித்து செல்லூர் ராஜு உள்ளிட்ட அதிமுக-வினர் செய்து வந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
[youtube-feed feed=1]