சென்னை: ஊர்ந்து, தவழ்ந்து சர்ச்சையை அப்படியே விட்டிருக்கலாம் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின்,   தானா வந்து மாட்டிகிட்டாங்க- என அண்ணா அறிவாலயம் கலைஞர்  திருமண  மண்டபத்தில் நடைபெறும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலுவின் இல்லத் திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் கூறினார்.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலுவின் இல்லத் திருமண விழா, அண்ணா அறிவாலயத்தில் இன்று  நடைபெற்றது. இந்த நிகழ்வில், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  பேச்சின் ஊடே, ஊர்ந்து கொண்டிருந்த தமிழ்நாடு இன்று திராவிட மாடல் ஆட்சியால் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது என்று சொன்னேன். அதை அப்படியே விட்டிருந்தால் எந்த பிரச்னையும் வந்திருக்காது. செய்தியும் வந்திருக்காது. தானாக வந்து மாட்டிக்கொண்டார்கள்.

நான் பேசி முடித்த பிறகு உதயகுமார் எழுந்து, முதல்வர் சிறப்பாக பேசினார். தெளிவாக பேசினார். ஆனால் ஊர்ந்து என்ற சொல்லை மட்டும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சொன்னார்.

உடனே நான் ஊர்ந்து வார்த்தை பிடிக்கவில்லை என்றால், தவழ்ந்து என்ற வார்த்தையை போட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்னேன்.

ஏற்கெனவே எஸ்.டி.பி.ஐ மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி எப்படி எல்லாம் முதலமைச்சர் பதவிக்கு வந்தேன் என்று கூறும்போது, தவழ்ந்து தவழ்ந்து படிப்படியாக வந்து முதலமைச்சர் பதவிக்கு வந்தேன் என்று அவரே பேசியிருக்கிறார். இதை நான் நேற்று தான் பார்த்தேன். முன்பே பார்த்திருந்தால் இதையும் சட்டமன்றத்தில் சொல்லிருப்பேன், என்று முதல்வர் ஸ்டாலின் அந்த விழாவில் பேசினார். இதனால் திருமண விழாவில் சிரிப்பலை ஏற்பட்டது.

முன்னதாக, நேற்று (ஏப்ரல் 29ந்தேதி) நடைபெற்ற சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. அரசு தலை நிமிர்ந்து இருக்கிறதா என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும் என்று பேசியிருந்தார்.

அதற்கு முதல்வர் ஸ்டாலின், “கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஊர்ந்துதான் சென்றது” என்று பதிலடி கொடுத்தார்.

‘ஊர்ந்து’ என்ற வார்த்தையால் கோபமடைந்த அதிமுக-வினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு அந்த வார்த்தையை நீக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். இது சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஸ்டாலின் எழுந்து, “ஊர்ந்து, தவழ்ந்து என்று நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அது ஒன்றும் அன்-பார்லிமென்ட் வார்த்தை அல்ல. அது உங்களுக்கு உறுத்தியிருந்தால், எதையோ குறிப்பிடுவதாக நீங்கள் நினைத்தால் அந்த வார்த்தையை நீக்கிவிடலாம். சபாநாயகர் அவர்களே ‘ஊர்ந்து’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு ‘தவழ்ந்து’ என்று போட்டுக்கொள்ளுங்கள்” என்று கிண்டலாக பதிலளித்தார். அதை இன்றைய திருமண விழாவிலும் சுட்டிக்காட்டி பேசினார்.