டில்லி
கர்நாடக முதல்வராகப் பதவி ஏற்றுள்ள எடியூரப்பாவுக்கு உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வியால் அவர் பதவியில் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த1986ம் ஆண்டு பெங்களூருவில் கர்நாடக அரசு கையகப்படுத்திய 5 ஏக்கர் நிலத்தை 2010ம் ஆண்டு முதல்வராக இருந்த எடியூரப்பா விடுவித்து உத்தரவு பிறப்பித்தார். அதே நேரத்தில் அரசிடம் நிலம் இருந்தபோதே அதன் முன்னாள் உரிமையாளரிடம் இருந்து காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமார் நிலத்தை விலைக்கு வாங்கி பல கோடி ரூபாய் லாபத்துக்கு விற்றுள்ளார். இந்த விவகாரத்தில் இருந்து சிவகுமாரைக் காப்பாற்றுவதற்காக அப்போது முதலமைச்சராக இருந்த எடியூரப்பா தன்னிச்சையாகச் செயல்பட்டார் எனப் புகார் எழுப்பப்பட்டது.
இந்த புகாரை ஒட்டி கர்நாடக அரசு கையகப்படுத்திய நிலத்தை விடுவித்த விவகாரம் குறித்து எடியூரப்பா மற்றும் காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை முடித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு வழக்கு நிலுவையில் உள்ளது. இன்று அந்த வழக்கு விசாரணையில். எடியூரப்பாவிற்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், புகார் தந்தவரே மனுவைத் திரும்பப் பெற்றதாகத் தெரிவித்தனர்.
வழக்கறிஞர்கள் வாதத்தில் குறுக்கிட்ட நீதிபதிகள், ஊழல் வழக்கைக் கொல்லைப் புற வழியாக எப்படித் திரும்பப் பெற முடியும் என்று கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு முறையீடு நடைபெறும் நேரத்தில், வழக்கு திரும்பப் பெறப்பட்டு இருப்பதால் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றனர். அத்துடன் விரைவில் உரிய விசாரணை நடத்த உள்ளதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையிலேயே எடியூரப்பா முதல்வர் பதவியில் நீடிப்பாரா என்பது பற்றித் தெரியவரும்.