பாரதியாரின் செயல்பாடுகள், கவிதைகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள், சர்ச்சைகள் உண்டு. தற்போது, பாரதியார் நினைவு தினம் குறித்தே சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து சமூகவலைதளங்களில் வைரலாகும் பதிவு ஒன்று, மூத்த பத்திரிகையாளர் அ.ப.இராசா அவர்களது முகநூல் பதிவு.
“தவறான தேதியில் பாரதி நினைவு தினம்!” என்ற தலைப்பிலான அந்த பதிவு:
“காலம் காலமாக புத்தகத்திலும், மேடைகளிலும் நாம் எதிர்கொள்ளும் வார்த்தைகளில் ஒன்று, செப்டம்பர் 11 பாரதி நினைவு தினம். தமிழக அரசும் இதையே கடைபிடிக்கிறது. இன்று டைம்லைன் முழுக்க பாரதியின் நினைவு பகிரப்படுகிறது.
இது உண்மையா?
திருவல்லிக்கேணியில் பாரதி இறந்தது, செப்டம்பர் மாதம், 11ந்தேதி இரவு, 1:30 மணி. வரலாற்று ஆசிரியர்களும் இதைத் தான் பதிவு செய்கின்றனர். சென்னை மாநகராட்சி கொடுத்த இறப்புச் சான்றிதழிலும் அந்த தேதியே குறிப்பிடப்பட்டிருக்கிறது. லாஜிக் படி பார்த்தால், இரவு 12 மணிக்கு மேல், அடுத்த நாள் துவங்குகிறது.
எனில், பாரதிக்கு நாளை தானே, நினைவு தினம்? அந்த காலக்கட்டத்தில் இருந்த தொடர்பு சாதனங்கள் வழி, நினைவு தேதி தவறாக கடைபிடிக்கப்பட்டதன் காரணம் புரிகிறது. வரலாற்றின் இருண்ட பக்கங்கள் மீது, மஞ்சள் வெளிச்சம் பாய்ச்சும் இக்காலத்திலும், தொடர்ந்து இதே தேதியில் கடைபிடிக்கப்படும் நோக்கம் என்ன? இது குறித்து, தமிழ் ஆய்வாளர்கள் தொடர் குரல் எழுப்ப வேண்டும். பாரதி, வெறும் கவிஞன் மட்டுமல்ல. இங்கு அரசியல் குறியீடாக பார்க்கப்பட்டவர். அவர் நாளை அதிகாலை இறந்து விடுவார். அதற்குள் ஏன் அவசரப்பட்டு அவரை கொலை செய்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்புகிறது அந்த பதிவு.
விடை காண வேண்டிய கேள்வி.