டில்லி

டில்லி உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டலுக்கு மத்திய அரசின் பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.

மத்திய அரசால் பெண்களுக்கு வழங்கப்படும் நாரி சக்தி புரஸ்கார் என்னும் பெண் சாதனையாளர் விருது இந்த வருடம் 30 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.   இந்த விருதுக்கானவர்களை பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத் துறை அமைச்சகம் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது.   இந்த விருதில் ஒரு சான்றிதழும் மற்றும் ரூ. லட்சம் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வருடம் இந்த விருதைப் பெறுபவர்களில் டில்லி உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டலும் ஒருவர் ஆவார்.    அவருக்கு மத்திய அரசின் விருது வழங்கப்படுவதை ஒட்டி கடும் சர்ச்சை எழுந்துள்ளது.    இது வரை நீதிபதிக்கு விருது வழங்குவதைப் பற்றி எந்த ஒரு சட்டமும் இயற்றப்படாததால் இது தவறில்லை என சிலர் வாதிடுகின்றனர்.   அதே சமயத்தில் பத்ம விருது வழங்கப்பட்ட நீதிபதிகள் பகவதி மற்றும் வெங்கடாசலையா ஆகியோருக்கு அவர்கள் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகே வழங்கப்பட்டது என்பதை எதிர்ப்பாளர்கல் சுட்டிக் காட்டுகின்றனர்.

எதிர்ப்பாளர்கள் கூறும் மற்றொரு காரணம், ’தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத் துறை அமைச்சகத்துக்கு எதிரான பல வழக்குகள் டில்லி உயர்நீதிமன்றத்தால் விசாரிக்கப் பட்டு வருகிறது.   அதே அமைச்சகம் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிக்கு விருது வழங்கும் போது அந்த நீதிபதியின் தீர்ப்பின் மீது நம்பகத்தன்மை குறைய வாய்ப்புள்ளது’ என்பதாகும்/

மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே மற்றும் இந்திரா ஜெய்சிங் ஆகியோர் உட்பட பலர் இந்த விருது அளிக்கப்பட்டதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.   இந்திரா ஜெய்சிங், தனது டிவிட்டர் பக்கத்தில், “மத்திய அரசு கீதா மிட்டலுக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது.   எனவே இனி அவரை அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க அதிகாரம் அளிக்கக் கூடாது” என பதிந்துள்ளார்.