சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்டு வந்த நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க சைபர் கிரைம் போலீசார் யுடியூப் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சிலரை சாதி ரீதியாக நடிகை மீரா மிதுன் விமர்சித்துப் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மீராமிதுன் வீடியோ ஒன்றில் தனது ஆண் நண்பருடன் இணைந்து பேசி வெளியிட்டிருந்தால். அதில், குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த இயக்குநர்களை சினிமா துறையைவிட்டே நீக்க வேண்டும் எனக் கூறியதாகத் தகவல் வெளியானது.
இது தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் மீரா மிதுன் மீது, கலகலத்தை உண்டாக்குதல், வன்கொமை தடுப்புச் சட்டம் உள்பட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
‘ஆனால்,இதற்கும் வீடியோ மூலம் பதில் அளித்த மீரா மிதுன், ` என்னைக் கைது செய்வது என்பது நடக்காது. அது கனவில் மட்டுமே நடக்கும். பட்டியலின மக்கள் அனைவரையும் நான் தவறானவர்களாகக் கூறவில்லை. எனக்குத் தொல்லை கொடுத்தவர்களை மட்டுமே கூறினேன்’ என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், காவல்துறையினர் அவரை தேடுவதாக தகவல் வெளியான நிலையில், அவர் கேரளாவுக்கு தப்பிச்சென்று தலைமறைவானார். ஆனால், அவரை காவல்துறையினர் மடக்கி கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், நீதிமன்ற காவலில் உள்ள நடிகை மீரா மிதுன் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், மாற்றி மாற்றி பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மன நல ஆலோசகர் முன்னிலையில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மீராமிதுன் யுடியூப் வலைதளத்தை முடக்க வேண்டும என்று சைபர் கிரைம் போலீசார் யுடியூப் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.