டில்லி
சிபிஎஸ்இ தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்ததால் அக்கேள்வி நீக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடெங்கும் சி பி எஸ் இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வுகள் நடந்து வருகின்றன. கடந்த 11 ஆம் தேதி அன்று 10 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வு நடந்தது. இந்த தேர்வு வினாத்தாளில் மனைவிகள் கணவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்காததால் குழந்தைகள் ஒழுக்கமாக வளர்வதில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. நாடெங்கும் இந்த கேள்வி சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த கேள்வி ஒரு பிற்போக்குத்தனமான கேள்வி எனப் பெற்றோர்கள், அரசியல் தலைவர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மக்களவையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “மத்திய அரசு சிபிஎஸ்இ கேள்வி விவகாரத்தில் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும். இத்தகைய கேள்வி எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என உரையாற்றினார்.
இதையொட்டி சி பி எஸ் இ நிர்வாக தேர்வு கட்டுப்பாளர் சன்யம் பரத்வாஜ் நேற்று, “நாடெங்கும் கடந்த 11 ஆம் தேதி நடந்த தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வியால் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதனால் சர்ச்சையான கேள்வி நீக்கப்படுகிறது. மாணவர்களுக்கு அதற்குண்டான முழு மதிப்பெண்களும் வழங்கப்படும். எதிர்காலத்தில் இவ்வாறு நிகழாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.