சென்னை: முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்வதில் , எடப்பாடி, ஓபிஎஸ் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. நள்ளிரவு தாண்டியும், அதிமுக மூத்த உறுப்பினர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இன்று ( அக்டோபர் 7 -ம் தேதி) அ.தி.மு.க. சார்பில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் மோதல் வெடித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இது தொடர்பாக இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் வகையில் மூத்த அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த விஷயத்தில் இருவரும் தொடர்ந்து பிடிகொடுக்காமல் இருப்பதால், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர்ராஜூ,தங்கமணி, வேலுமணி ,உடுமலை ராதாகிருஷ்ணன், அன்பழகன், காமராஜ், செங்கோட்டையன், மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் , விஜயபாஸ்கர் உள்ளிட்டோருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சமி தொடர்ந்து. ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதேவேளையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் உடன், சட்டத்துறை அமைச்சர் அமைச்சர் சி.வி.,சண்முகம் மனோஜ் பாண்டியன், கே.பி.முனுசாமி, உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள தங்களது வீட்டில் இருவரும் 5 ம் கட்டமாக தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். நள்ளிரவு கடந்த பின்னரும் துணைமுதல்வர் உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துவருவதாக கூறப்படுகிறது.
நேற்று பிற்பகல், ஓபிஎஸ் கேட்டுக்கொண்டபடி 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைப்பது குறித்தும், முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பது பற்றியும் சுமூக முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தொடர்ந்து வழிகாட்டு குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் யார்?, அந்த குழுவுக்கு என்னென்ன அதிகாரம் இருக்கும் என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், அதிலும் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் திட்டமிட்டபடி இன்று முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.