சென்னை,
தமிழகத்தில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
மேலும் காஞ்சிரம், திருவள்ளுர் மாவட்ட ஏரிகளும் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதுத் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக கடந்த மாதம் 29-ம் தேதி இரவு முதல் மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 30-ம் தேதி 20 செ.மீ. மழையும், 31-ம் தேதி 124 செ.மீ., 1-ம் தேதி 63 செ.மீ. என சராசரி மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் காலை முதல், நேற்று காலை வரை பதிவான மழையளவு 21 செ.மீ. மட்டுமே. நேற்று பிற்பகல் முதல், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, செங்குன்றம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அதிகளவில் மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று நிலவரப்படி பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 208 கன அடியும், சோழவரம் ஏரிக்கு 521 கன அடியும், புழல் ஏரிக்கு 694 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 778 கன அடியும் தண்ணீர் வந்துகொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
நேற்று காலை நிலவரப்படி, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 349 மில்லியன் கன அடியும், 881 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 225 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது.
அதே போல், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 672 மில்லியன் கன அடியும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 679 மில்லியன் கன அடி நீர் இருப்பும் உள்ளது.
இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கன அடி.
இவற்றில் கடந்த மாதம் 26-ம் தேதி 1,028 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு இருந்தது. ஆனால், தற்போது பெய்து வரும் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று காலை நிலவரப்படி 1,925 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து, சென்னை குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 94 கன அடி நீர் திறந்துவிடப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
காஞ்சிபுரம்
தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 98 ஏரிகள் நிரம்பின. மேலும் 148 ஏரிகளில் 75 சதவீதம் அளவுக்குத் தண்ணீர் நிரம்பியுள்ளது. தொடர்மழை காரணமாக வேடந்தாங்கல் ஏரி, வளையப்புதூர் ஏரி உட்பட 98 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
அதேபோல் 148 ஏரிகளில் 75 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பியுள்ளன. பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு ஆகிய ஆறுகள் கலக்கும் இடமான திருமுக்கூடல் பகுதியில் அதிக அளவு நீர் ஆறுகளில் ஓடுகிறது. அதிக மழை பெய்தால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுவதை தடுக்க மஞ்சள் நீர் கால்வாய் பல்வேறு இடங்களில் தூர்வாரப்பட்டு வருகிறது.
பல்வேறு ஏரிகளுக்கும் தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் மேலும் சில ஏரிகள் விரைவில் நிரம்ப வாய்ப்பு உள்ளது என்று பொதுப் பணித்துறையினர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பறவைகள் சரணாலயமாகத் திக ழும் வேடந்தாங்கல் ஏரி நேற்று முன்தினம் இரவு நிரம்பியது.
திருவள்ளுர்
மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 1, 269 ஏரிகளில், ஆவடி- கோயில் பதாகை ஏரி, பம்மதுகுளம்-லட்சுமிபுரம் ஏரி உள்ளிட்ட 34-க்கும் மேற்பட்ட ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. ஆகவே, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகள் வறண்டுக்கிடந்த ஆரணி ஆற்றிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பழவேற்காடு அருகே கடலை நோக்கி செல்லும் இந்த ஆரணி ஆற்றின் குறுக்கே கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அன்னப்பன்நாயக்கன் குப்பம் அணைக்கட்டு நிரம்பியுள்ளது.
2.60 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணைக்கட்டு நிரம்பியதால், மதகுகள் மூலம் அருகில் உள்ள ஏரிகளுக்கு உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அதனையும் மீறி, 10 செ.மீ., உயரத்துக்கு மழைநீர் வழிந்து செல்கிறது. அவ்வாறு வழிந்து செல்லும் மழைநீரில், சிறுவர்கள், இளைஞர்கள் நீராடி மகிழ்வதை காணமுடிந்தது.
இதுபோல நெல்லை மாவட்டத்திலும் ஏரிகள் நிரம்பி வருவதாக கூறப்படுகிறது.