சென்னை,

நேற்று மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பொழிந்து வருகிறது. கடந்த இரண்ட நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது.

வரும் 5ந்தேதி வரை மழை நீடிக்கும் என்று இந்திய மற்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு முதல் தொடர் மழை இருக்கும், ‘சென்னையை வைத்து செய்யப்போகிறது மழை’  என்று தமிழ்நாடு வெதர்மேனும் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

சென்னையில் நேற்று பிற்பகல் மூலம் விட்டு விட்டு பெய்த மழை மாலை முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை தற்போது வரை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது.

வடசென்னையில் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மிதக்கிறது. எம்கேபி நகர் பகுதி, வியாசார் பாடி,  முல்லை நகர், ஓட்டேரி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள்  முழுவதும் வெள்ளக்காடாக மாறின சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளும் தண்ணீர் காரணமாக மூழ்கி உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

சென்னை பாரிமுனை சுரங்கப்பாதை, வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை, பெரம்பூர் ரெயில்வே சுரங்கப்பாதை,  எழும்பூர் சுரங்கப்பாதை, சேத்பட்டு சுரங்கப்பாதை, மாம்பலம் சுரங்கப்பாதை உள்பட அனைத்து சுரங்கப்பாதைகளும் தண்ணீரால் மூழ்கி உள்ளதால் வாகனங்கள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.‘

பூந்தமல்லி நெடுஞ்சாலை, ரித்தர்டன் சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, 100 அடி சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பீட்டர்ஸ் சாலை, சர்தார் பட்டேல் சாலை, ஸ்மித் ரோடு, அவுட்டர் ரிங்க் ரோடு, செனடாப் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. இச்சாலைகளில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அடையாறு, மந்தைவெளி, சாந்தோம், புரசைவாக்கம், அயனாவரம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், செக்ரடேரியட் காலனி, காமராஜர் சாலை, பாரிமுனை, கிண்டி உள்ளிட்ட அநேக இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து வெள்ளமென ஓடியது. தெருக்களிலும் மழைநீர் தேங்கியது.

மேலும், சென்னை கோயம்பேடு பகுதி, மாம்பலம், அடையாறு, மாநகராட்சி அலுவலகம் உள்ள ரிப்பன் மாளிகை பகுதி, தாம்பரம், முடிச்சூர், பீர்க்கங்கரனை உள்பட அனைத்து பகுதிகளும் தண்ணீரால் சூழப்பட்டு சென்னை மாநகரமாக தனித்தீவாக காட்சி அளிக்கிறது.

சென்னை முழுவதும் தண்ணீர் காடாக காட்சி அளிப்பதாலும், சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதாலும், வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளித்து,  ஊர்ந்து சென்றன.  அனைத்து  சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

ரெயில்வே தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால்  மின்சார ரெயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்பட்ட அனைத்து மின்சார ரெயில்களும் வேகம் குறைத்து இயக்கப்பட்டன. மழை காரணமாக ஆங்காங்கே 20 நிமிடங்கள் வரை மின்சார ரெயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகள் மூலம் தண்ணீரால் சூழப்பட்டு, வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து உள்ளது. எந்தெந்த குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதோ, அங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

அரசும், மாநகராட்சியும் தண்ணீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றினாலும், தண்ணீர் வேறு இடத்துக்கு போக வழியின்றி அதே இடத்துக்கே மீண்டும் வந்துவிடுவதால், மாநகராட்சி பணியாளர்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

சென்னையை அடுத்த புறநகர் பகுதிகளிலும்  கொட்டித்தீர்த்த மழை காரணமாக,  தாம்பரம், பல்லாவரம், திருநீர்மலை, சேலையூர், பெருங்களத்தூர், முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டு தனித்தீவாக காட்சி அளிக்கிறது.

தாம்பரம் அருகே வரதராஜபுரம் அமுதம் நகர், ராயப்பா நகர், மகாலட்சுமி நகர், அஷ்டலட்சுமி நகர் பகுதிகளில் மழைநீர் குறைந்த போதிலும் வெள்ள பயத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் இன்னும் வீடுகளுக்கு திரும்பவில்லை. வரதராஜபுரம் பகுதியில் அடையாறு ஆற்றில் வேகமாக வெள்ளநீரை வெளியேற்ற பொக்லைன் எந்திரம் மூலம் கரையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி உள்ளதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.

மழை காரணமாக  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரப்பர் படகுகளுடன் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.  பேரிடர் நிவாரண குழுக்களும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும்  பலத்த மழை காரணமாக தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உள்ளன. செம்பாக்கம் பெரிய ஏரி நிரம்பியதால் ஆக்கிரமிப்பாளர்களால் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ராஜகீழ்ப்பாக்கம் ஏரியிலும் ஆக்கிரமிப்பு வீடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் உபரிநீர் செல்லும் பகுதியில் ஏரி கரையை உடைக்க சிலர் முயற்சிப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது.

சேலையூர் ஏரியை பார்வையிட்ட காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறும்போது, “ஏரி ஆக்கிரமிப்பாளர்களால் ஏரிகள் உடைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

இதேபோல பீர்க்கன்காரணை ஏரி நிரம்பிய நிலையில், ஏரிக்கரை பஸ் நிறுத்தம் அருகே தண்ணீர் வெளியேறும் வகையில் கரை உடைபட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் ஏரி தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் அருகிலுள்ள மாநகராட்சி பள்ளிகளிலும், நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மழையின் பாதிப்பு கடந்த 2015ம் ஆண்டை நினைவுபடுத்துவதாகவே உள்ளது.

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்பட 6 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளன.

மேலும் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்கும்படி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.