சென்னை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கும் மேலாகக் கனமழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவானதை அடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  நகரில் பல இடங்களில் மழைநீர் வெள்ளமாகத் தேங்கி நிற்கிறது.    மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளது.

நகரின் முக்கிய பகுதிகளான தியாகராய நகர், மேற்கு மாம்பலம், சூளைமேடு, புரசைவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.  இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் மேலும் மழை அதிகரிக்க உள்ளது.

வானிலை ஆய்வு மையம் சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்துக்கும் கன மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.   சென்னை, செங்கல்பட்டு மாவட்ட கடற்கரைப்பகுதியில் கடல் அலைகள் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகின்றன.

தொடர்ந்து இரவு முழுவதும் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.  தற்போது ஏரிக்கு விநாடிக்கும் 3,110 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 நாளாக விநாடிக்கு 2000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.