சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆராஜனா 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் நூதன தண்டனை விதித்துள்ளது. அதன்படி, அவர்கள் முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் சேவையாற்ற உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான குமார் ஜெயந்த், எஸ்.கே.பிரபாகர், வி.ராஜாராமன், பி.குமாரவேல் பாண்டியன், டி.பாஸ்கர பாண்டியன் ஆகிய 5 பேர் முதியோர் இல்லங்கள் அல்லது ஆதரவற்றோர் விடுதிக்குச் சென்று அங்கிருப்பவர்களுடன் தங்களது நேரத்தை செலவழிப்பதுடன், தங்களது சொந்த பணத்தில் ஸ்பெஷல் மதிய உணவு அல்லது இரவு உணவு வாங்கிக்கொடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பட்டுதேவானந்த் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்ற முடியாத நிலையில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளதால், அவர்கள் நீதிமன்ற அவமதிப்புகளுக்கு ஆளாகி, அடுத்தடுத்து நீதிமன்றங்களின் படியேறி மன்னிப்பு கோரும் அவலம் அரங்கேறி வருகிறது. இது ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத நிலை தொடர்ந்து வருகிறது. இதனால் ஏராளமான வழக்குகளில் தீர்வு காணப்பட்டும், அவைகள் செயல்படுத்தப்படாத நிலையே உள்ளது. அரசு பணிகள் முடங்கி உள்ளது. இதுபோன்ற ஒரு சில வழக்குகளில் மட்டும் பாதிக்கப்பட்ட வர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடி, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தொடர்ந்து, தங்களது தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். இதுபோல நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில், பல ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராகி, தங்களை மன்னிக்கும்படி கோரிக்கை விடுவதும் வாடிக்கையாக உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த இரு (2025 ஜனவரி, பிப்ரவரி) மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதை மதுரை உயர்நீதிமன்றம் மார்ச் மாதம் வழக்கு ஒன்றை சுட்டிக்காட்டி இருந்தது.. அதைத்தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தற்போதைய தலைமை செயலாளர் முருகானந்தம், முன்னாள் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆஜராகி தவறுக்கு மன்னிப்பு கோரிய அவலம் நடைபெற்றது.
அதற்கு முன்பு, தமிழ்நாடு அரசின் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் சி.சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்., நிதித்துறை செயலாளர் டி.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., வருவாய் நிர்வாகத்துறை முதன்மை கமிஷனர் ராஜேஷ்லக்கானி ஐ.ஏ.எஸ்., பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், வணிகவரித்துறை கமிஷனர் டி.ஜெகன்நாதன் ஐ.ஏ.எஸ்., கருவூலம் மற்றும் கணக்குத்துறை கமிஷனர் கிருஷ்ணன் உன்னி ஐ.ஏ.எஸ்., உள்பட 6 அதிகாரிகள் விசாரணைக்கு நேரில் ஆஜராகி தங்களது செயலுக்கு மன்னிப்பு கோரினர்.
அதுபோல மற்றொரு வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி தமிழக வருவாய் துறை செயலாளர் அமுதா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, இந்து சமய அறநிலைய துறை செயலாளர் சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், அறநிலைய துறை இணை ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர்கள் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினர்.
அதைத்தொடர்ந்து, சிஎம்டிஏ தனிச்செயலாளர் பிரகாஷ் ஐஏஎஸ் அதிகாரி ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுபோன்ற செயல்களால், தமிழ்நாட்டில் அரசு பணிகள் முடங்கி கிடப்பதுடன்,, நீதிமன்ற கடும் சொல்லுக்கும் ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆஜரான மேலும் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் நூதன தண்டனை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
முன்னதாக, திருப்பத்தூர் மற்றம் வேலூர் மாவட்டத்தில் தற்காலிக அரசு வாகன ஓட்டுநர்களாக பணிபுரிந்த சி.சின்னதம்பி, எம். கிருஷ்ணமூர்த்தி, பி.ஆனந்தன் ஆகியோரை பணிநிரந்தரம் செய்ய கடந்த 2021-ம் ஆண்டு செப்.29-ம் தேதி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் உத்தரவிட்டிருந்தார். இதனை அமல்படுத்தவில்லை எனக்கூறி மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான குமார் ஜெயந்த், எஸ்.கே.பிரபாகர், வி.ராஜாராமன், பி.குமாரவேல் பாண்டியன், டி.பாஸ்கர பாண்டியன் ஆகியோருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி பட்டுதேவானந்த் முன்பாக நடந்தது. அப்போது சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும் ஆஜராகி மனுதாரர்கள் 3 பேரும் கடந்தாண்டு பணிநிரந்தரம் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, 3 ஆண்டுகள் காலதாமதத்துடன் அதுவும் அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகு பணி நிரந்தர உத்தரவை நிறைவேற்றியுள்ளனர். இதனால் மனுதாரர்களின் பணிமூப்பு பாதிக்கப்பட்டு அவர்களுக்கு ஊதியம் போன்ற இதர பணப்பலன்களிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி, மனுதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பண இழப்பை சரிசெய்யும் வகையில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளும் தலா ரூ.1.25 லட்சம் வீதம் தங்களது சொந்த பணத்தை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்றார். அதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் இந்த உத்தரவு அதிகாரிகளுக்கு கொஞ்சம் கடினமானது என்றார்.
அதையடுத்து நீதிபதி பட்டுதேவானந்த் 5 பேரும் ஏதாவது முதியோர் இல்லம் அல்லது ஆதரவற்றோர் இல்லம் சென்று சேவை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கலாமா என்றார். அதற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் சம்மதித்து உத்தரவாத மனுக்களை தாக்கல் செய்தனர். அதையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், 5 பேரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதுடன் சேவை செய்கிறோம் என்றும் உறுதியளித்துள்ளனர்.
எனவே அவர்கள் 5 பேரும் இரு வாரங்களில் தங்களது விருப்பப்படி அவர்கள் பணிபுரியும் ஊரில் உள்ள ஏதாவது ஒரு முதியோர் இல்லம் அல்லது ஆதரவற்றோர் விடுதியில் இருப்பவர்களுடன் தங்களது நேரத்தை செலவிட்டு, தங்களது சொந்த செலவில் ஸ்பெஷல் மதிய உணவு அல்லது இரவு உணவை வாங்கி கொடுத்து அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
இந்த சேவை குறித்து நீதித்துறை பதிவாளரிடம் ஆதாரங்களுடன் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை யாராவது இந்த உத்தரவாதத்தை நிறைவேற்ற தவறினால் அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
நீதிபதி பட்டு தேவானந்த் தற்போது ஆந்திராவுக்கு பணிமாறுதலாகி சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: வருவாய் துறை செயலாளர் அமுதா உள்பட 5ஐஏஎஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்!