டெல்லி: பிரபல 5 நட்சத்திர ஓட்டலுக்கு நுகர்வோர் நீதிமன்றம் (கண்சுயுமர் கோர்ட்) ரூ.2 கோடி அபராதம் விதித்துள்ளது. இதற்கான காரணத்தைக் கேட்டால், நமக்கு சிரிப்பு மட்டுமின்றி ஆச்சரியமும் ஏற்படும். இருந்தாலும், வாடிக்கையாளரின் அசராத முயற்சியால் 5 நட்சத்திர ஓட்டலின் மிதப்புக்கு நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.
2018 ஆம் ஆண்டு ஹோட்டல் ஐடிசி மவுரியாவில் உள்ள சலூனில் தவறான முடி வெட்டுதல் மற்றும் சிகிச்சைக்காக தேசிய நுகர்வோர் தீர்வு ஆணையம் மவுரியா 5 நட்சத்திர ஓட்டல் நிர்வாகம், அந்த பெண்ணுக்கு ரூ .2 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..
சாம்பு விற்பனை மாடலிங் துறையில் உள்ள 42வயதுடைய பெண் ஒருவர், ஒரு இன்டர்வியூக்கு முன்னர் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 18ந்தேதி அன்று ஐடிசி மவுரியா 5 நட்சத்திர ஓட்டலில் செயல்பட்டு வரும் சலூனில் முடி வெட்டுவதற்காக சென்றுள்ளார். இதுதொடர்பாக அவர் ஓட்டலின் வரவேற்பாளரை நாடி அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். ஆனால், அவரிடம் முடிவெட்டுவது குறித்து பேசியுள்ளார்.
அதைத்தொடர்ந்து அங்குள்ள சலூனுக்கு சென்று சிகையலங்கா நிபுணரிடம், முன்னால் ஃப்ளிக்ஸ் மற்றும் கீழே இருந்து 4 இன்ச் டிரிம் செய்வது குறித்து அறிவுறுத்தியதுடன், தனது நீண்ட முடியை கட் செய்ய அறிவுறுத்தி உள்ளார். ஆனால், அங்கு பணியில் இருந்த சிகையலங்கார நிபுணர், தவறுதலாக அவரது நீண்ட முடியை மிகவும் ஷார்டாக வெட்டிவிட்டார். மேலும் தனது தலையில் அம்மோனியாவைக் கொண்டு சிகிச்சை செய்ததில், அவரது தலையில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டது என்றும், இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்தார். ஆனால், ஹோட்டல் நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில், தேசிய நுகர்வோர் ஆணையத்தில் புகார் கொடுத்தார்.
அவர் கொடுத்த புகார் மனுவில், தான் முடிவெட்டும் போது, சிகையலங்கார நிபுணர், வெட்டும்போது, தனது தலையை கீழே வைக்கும்படி கேட்டதாகவும், அதனால் கண்ணாடியில் தன்னை தெளிவாக பார்க்க முடியவில்லை என்றும் , முடிவெட்டிய பின்னரே, தனது தலைமுடியை கவனித்ததாகவும், தனது முடியையும் வெட்டியதுடன், மேலே இருந்து 4 அங்குலங்கள் மட்டுமே விட்டு, தோள்களைத் தொட்டும் அளவிலேயே முடிவை விட்டு வைத்திருந்தார். மேலும் தனது தலைக்கு அம்மோனியா கொண்டு சிகிச்சை அளித்ததால், கடுமையான எரிச்சல் ஏற்பட்டது என்றும், இதனால் தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி மேலும், தனது தலைமுடியை தவறுதலான வெட்டியது கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியாக தெரிவித்து உள்ளார்.
மேலும், இதுதொடர்பாக தான் ஓட்டல் நிர்வாகத்தில் புகார் கொடுத்தேன். இதற்கு வரவேற்பாளர் தன்னிடம் மன்னிப்பு கோரியதுடன், முடிவெட்டியதற்கு கட்டணம் வேண்டாம் என்று கூறிய துடன், கவனக்குறைவான சிகையலங்கார நிபுணருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்தின் பொதுமேலாளரை பார்க்க சென்றபோது, அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், எனவே, ஐடிசி ஹோட்டல்ஸின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி தீபக் ஹக்ஸரை அழைத்து, அவரிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கத்தை ஹோட்டல் நிர்வாகம் சரியான முறையில் கொடுக்காததால், இழப்பீடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நுகர்வோர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தீர்ப்பில், 5நட்சத்திர ஹோட்டல் மவுரியாவின் சிகையலங்கார நிபுணர், “முடி சிகிச்சையின் போது, அவரது தலைமுடி மற்றும் உச்சந்தலையில் அதிகப்படியான அம்மோனியாவைக் கொண்டு சிகிச்சை அளித்ததால், அவரது தலையில் சேதம் ஏற்பட்டு உச்சந்தலையில் அதிக எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது தலையில், கிட்டத்தட்ட முடி இல்லாதநிலை ஏற்பட்டது. இதனால், இந்த பெண் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் சலூனில் சிகையலங்கார நிபுணரின் கவனக்குறைவால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
புகார்தாரர் ஒரு சிறந்த மாடலாக மாற விரும்பினார். இவர் ஏற்கனவே VLCC மற்றும் Pantene சாம்பு பிராண்டுகளுக்கு மாடலாக இருந்துள்ளார். அவரது நீண்ட முடி இழப்பு காரணமாக, அவரது கனவு கலைந்துள்ளது. அவரால் தொடர்ந்து பணியிடத்தில் செயல்பட முடியவில்லை. அவர் ஏற்கனவே அந்த நிறுவனத்தில் ஒரு மூத்த மேலாண்மை நிபுணராக வேலை செய்தாள், இறுதியில் அவர் வேலையை இழந்துள்ளார். இதனால், அவர் பெரும் இழப்பை சந்தித்ததுடன், அவரது வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றி, ஒரு சிறந்த மாடலாகும் கனவை சிதைத்தது. இந்த விஷயத்தில் ஹோட்டல் நிர்வாகம் மெத்தனமாக இருந்துள்ளது, சரியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், “பெண்கள் தங்கள் கூந்தலைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. முடியை நல்ல நிலையில் வைத்திருக்க அவர்கள் ஒரு அழகான தொகையை செலவிடுகிறார்கள். அவர்கள் கூந்தலுடன் உணர்வுபூர்வமாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள், ”என்ற ம் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
அவரது மன உளைச்சலையும் இழப்பையும் கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஐடிசி மவுரியாவுக்கு அந்த பெண்ணுக்கு 2 கோடி இழப்பீடு வழங்க தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் (என்சிடிஆர்சி) உத்தரவிட்டது.