சென்னை

போதுமான தொகை உள்ள போதே காசோலையை திருப்பி அனுப்பிய பரோடா வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து ரூ, 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

சிறுதொழில் புரிவோரான ராஜேஷ் குமார் என்பவர் திருவல்லிக்கேணியில் உள்ள பரோடா வங்கியில் நடப்புக் கணக்கு வைத்துள்ளார்   கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில்  ஒரு நிறுவனத்துக்கு இரு காசோலைகள் அளித்தார்.    காசோலையைப் பெற்றுக் கொண்ட ரெடிங்க்டன் இந்தியா என்னும் நிறுவனம் அவைகளை தனது வங்கிக் கணக்கில் போட்டது.

ஆனால் ராஜேஷ்குமாரின் நடப்புக் கணக்கில் போதுமான தொகை இருந்த போதிலும் பரோடா வங்கி பணம் இல்லை எனக் காரணம் கூறி காசோலைகளை திருப்பி அனுப்பி விட்டது.   இதனால் ராஜேஷ்குமார்  தமிழ்நாடு மாநில நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.  வழக்கில் அவர், “போதிய பணம் இருக்கும் போதே எனது காசோலைகள் திருப்பி அனுப்பப் பட்டதால் எனது தொழிலுக்கு பாதிப்பு உண்டாகி விட்டது.  மேலும் எனது நிறுவனத்தின் நற்பெயரும் கெட்டுவிட்டது.  இதற்காக எனக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு பரோடா வங்கி அளிக்க வேண்டும்” என கோரி இருந்தார்.

வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற அமர்வு, “வங்கிக் கணக்கில் பணம் இருக்கும் போது காசோலையை திருப்பி அனுப்பியது பரோடா வங்கியின் கண்டனத்துக்குரிய குற்றமாகும்.    இதனால் மனுதாரருக்கு ஏற்பட்டுள்ள மனு உளைக்கலுக்கும், பாதிப்புகளுக்கும் ரூ. 10 லட்சம் இழப்பீட்டை பரோடா வங்கி தர வேண்டும்  மேலும் அத்துடன் ரூ. 10 ஆயிரம் வழக்குச் செலவுக்கான தொகையாக சேர்த்துத் தர வேண்டும்.  இந்த தொகையை இன்னும் ஒரு மாதத்துக்குள் தர வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.