சென்னையில் தற்போதுள்ள கழிவுநீர் வடிகால் அமைப்பு 40 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த கட்டிடங்கள் மற்றும் சிறிய மக்கள் தொகைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது.
கடந்த 40 ஆண்டுகளில் சென்னை நகரின் அனைத்து சாலைகளிலும் கட்டடங்கள் அதிகரித்துள்ளதோடு மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது. இதனால் கழிவுநீர் உற்பத்தி அதிகரிப்பை சமாளிக்கத் தேவையான சிறந்த கழிவுநீர் அமைப்புகள் தேவைப்படுகிறது.
பல சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுவதுடன் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது.
இதனை சீர் செய்யும் வகையில் சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB) தற்போதுள்ள கழிவுநீர் அமைப்பை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்துள்ளது.
கொடுங்கையூர், நெசப்பாக்கம் மற்றும் கோயம்பேடு ஆகிய மூன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் கழிவுநீர் சேகரிப்பு வலையமைப்பை மேம்படுத்துவதற்கான DPR இன் இடைக்கால அறிக்கையை திட்ட ஆலோசகர் வழங்கினார்.
GCC மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்குச் சொந்தமான சாலைகளில் குழாய்ப் பணிகள் மற்றும் அடுத்த 30-40 ஆண்டுகளில் நெட்வொர்க்கை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள் அதில் இடம்பெற்றுள்ளது.
அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், ராயபுரம், அடையாறு, திரு.வி.க.நகர் மற்றும் தண்டையார்பேட்டை போன்ற முக்கிய பகுதிகளில் தற்போதுள்ள சாக்கடை அமைப்பை மேம்படுத்த பெரிய அளவில் சாலைகள் தோண்டும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
சாலைகளில் பாதசாரிகள் நடந்து செல்லவும் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு இறுதியில் சாலைகள் தோண்டும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இதனால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் கவுன்சிலர்களை அறிவுறுத்தியுள்ளனர்.