காவிரி ஆற்றின் குறுக்கே அணைகள் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமான காவிரி ஆற்றின் குறுக்கே, மேகேதாட்டூ, ராசிமணல் ஆகிய இடங்களில் தடுப்பு அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, நேற்று கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில், 5912 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாகக் கர்நாடக மாநில சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா செய்தியாளர்களிடம் கூறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கின்றது. தமிழ்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, காவிரியின் குறுக்கே தடுப்பு அணைகள் கட்டக் கர்நாடகம் முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
இந்த இரு தடுப்பு அணைகள் மூலம் 66 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு, பெங்களூரு மற்றும் ராமன்காரம் மாவட்டங்களின் குடிநீர்ப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும், புதிதாக பல லட்சம் ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்குக் கொண்டு வரப்படும் என்றும் கர்நாடக அரசு கூறி இருக்கின்றது.
நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்தாத கர்நாடக அரசு, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் அலட்சியப்படுத்தி விட்டது. இதனால், காவிரி பாசனப் பகுதிகளில் ஒரு போக சாகுபடிக்குக்கூட நீர் இல்லாமல், சோழவள நாடு பாலைவனம் போலக் காட்சி அளிக்கின்றது. பயிர்கள் கருகியதைக் கண்டு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டும், அதிர்ச்சியிலும் உயிர் இழந்தனர்.
2014 ஆம் ஆண்டு டிசம்பர் 7, 8 ஆகிய நாட்களில் டெல்லியில் உள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் புதிய அணைகள் கட்டுவதற்கான திட்டத்தைச் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த சதி ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த அப்போதைய மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பொறுப்பில் இருந்த பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். புதிய அணைகள் கட்டுவதற்கு மத்திய அரசு வெளிப்படையாக அனுமதி கொடுப்பது இல்லை எனவும், அதே நேரத்தில் கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதைத் தடுப்பது இல்லை எனவும் அப்போது முடிவு செய்தனர். அதன்படி, இப்போது மத்திய அரசின் கண் அசைவில்தான் கர்நாடக மாநில அரசு அணைகள் கட்டுவதற்கான நிதியை ஒதுக்கி இருக்கின்றது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்திட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்கூட, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைத்திட நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு, கர்நாடக மாநிலத்திற்குத் துணை போவது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது ஆகும்.
கர்நாடகம் தடுப்பு அணைகள் கட்டினால், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும்; மூன்றுகோடி மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும்.
எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, காவிரியின் குறுக்கே மேகதாட்டு, இராசி மணலில் கர்நாடக அரசு அணைகள் கட்டும் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” இவ்வாறு தனது அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.