பெங்களூரு:

ரசியல் சாசனம் காக்கப்பட  வேண்டுமானால், பாரதிய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்று  ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ் கூறினார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு அரசியல் கட்சியினரிடையே கூட்டணி பேச்சு வார்த்தையும், வேட்பாளர்கள் தேர்வும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம் (சரத்யாதவ் அணி) தலைவர் சரத்யாதவ் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மதவாத கட்சியான பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இதற்காக காங்கிரஸ் அல்லது ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி வைக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், இன்னும் 2 நாட்கள் இங்கு தங்கியிருந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவேன் என்றும் கூறினார்.

கர்நாடக சட்டமன்ற  தேர்தலை நாடே உற்றுநோக்கி  காத்திருக்கிறது. வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு, கர்நாடக சட்டமன்ற தேர்தல் அரை இறுதி போன்றது என்று கூறினார்.

நாட்டின் அரசியல் சாசனம் காக்கப்பட வேண்டுமானால் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றார். பா.ஜனதா அல்லாத நாட்டை உருவாக்க கர்நாடகம் தொடக்கமாக அமைய வேண்டும்.

மதவாதத்தால் நாட்டில் பிரச்சினை ஏற்படுகிறது. பீகாரில் மெகா கூட்டணி அமைத்துள்ளோம். அங்கு பா.ஜனதா தோல்வி அடைந்தது. ஆனால், முதல்வர் நிதிஷ்குமாரை பாஜக வளைத்துக்கொண்டது என்றார்.

விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பியோடி 3-வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  இதற்கு பா.ஜனதா தான் காரணம்.

ரூபாய் நோட்டு ரத்து செய்யப்பட்டதால் கருப்பு பணம் வெளியாகும் என்று கூறினர். ஆனால் இதன் காரணமாக பாதிக்கப்பட்டது  சாமானிய மக்கள்தான் என்று கூறிய அவர், வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக பிரதமர் மோடி கூறினார். அவரது வாக்குறுதி என்ன ஆனது?

இவ்வாறு சரத்யாதவ் கூறினார்.