நாகர்கோவில்: கலவரம் செய்து திமுக ஆட்சியை அகற்ற சதி நடைபெறுவதாக, நாகர்கோவிலில் இன்று  நகராட்சி கட்டிடம், கருணாநிதி சிலை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

கள ஆய்வில் முதல் அமைச்சர் திட்டத்தின் கீழ் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகர்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.  தொடர்ந்த, கன்னியாகுமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதிகுக 6.5 அடி உயர் பீடத்தில் 8 அடி உயர உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. அதை திறந்த வைத்து சிறப்புரை ஆற்றினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் முன்பு நகராட்சியாக இருந்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நாகர்கோவில் நகராட்சி அலுவலகம் குறுகலான சாலையில் இருப்பதால், போக்குவரத்து சிரமம் இருந்து வந்தது. அதைப் போக்கும் விதமாக புதிதாக மாநகராட்சி அலுவலகம் கட்ட ரூ.11.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதையடுத்து நாகர்கோவில்,  கலைவாணர் அரங்கம் இருந்த இடத்தில் அதை இடித்து அகற்றிவிட்டு புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டும் பணிகள் நடைபெற்று முடிந்தன. இந்த மாநகராட்சி அலுவலகம் 2 தளங்களுடன் பிரம்மிக்கும் வகையில்  கூட்ட அரங்கம் லிப்ட் வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கள ஆய்வில் முதல் அமைச்சர் திட்டத்தின் கீழ் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். அதில் ஒரு பகுதியாக இன்று நாகர்கோவிலுக்கு வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  புதிய மாநகராட்சி அலுவலக கட்டிடத்தை   திறந்து வைத்தார்.

தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. 6.5 அடி உயர் பீடத்தில் 8 அடி உயர கருணாநிதியின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. ‘ இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல் கன்னியாகுமரி மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எந்த லட்சியத்திற்காக தலைவர் கருணாநிதி, அண்ணா ஆகியோர் பாடுபட்டார்களோ அதனை நிறைவேற்ற வேண்டும். ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் நமது கடமையை ஆற்றிட வேண்டும். நம்மை பாராட்டுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். தமிழர்கள் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பாராட்டி வருகின்றனர் வாழ்த்தி வருகின்றனர்.

வெளிநாடுகளில் உள்ளவர்களும் ஆட்சியின் சாதனையை பார்த்து வாழ்த்தி வருகின்றனர். ஆனால் சிலர் எப்படியாவது திமுக ஆட்சியை அகற்ற பல்வேறு சதி திட்டங்கள் தீட்டி வருகின்றனர். சாதி, மத கலவரத்தை தூண்டலாமா என சிலர் முயற்சி செய்து வருகின்றனர். நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்த திட்டமிட்டு சதி திட்டங்களை தீட்டுகின்றனர். தங்களை விளம்பரப்படுத்த அவர்கள் நம் மீது விமர்சனத்தை வைக்கின்றனர்.

நாட்டை பிளவுபடுத்தும் எண்ணத்தில் உலவிக் கொண்டிருக்கும் சிலர் நம் மீது புழுதி வாரி தூற்றுகிறார்கள். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் நம் மீது விமர்சனங்களை வைக்கின்றனர். தொடர்ந்து திமுக ஆட்சியில் இருந்தால் நம் பிழைப்பு என்னாவது என சிலர் நினைக்கின்றனர். திமுகவினர் நமக்குள் உள்ள பிரச்னையை தூக்கி வைத்து விட்டு ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். தமிழ்நாட்டை மட்டுமல்ல நாட்டையும் நாம் காப்பாற்ற வேண்டும், இதற்கு அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பான கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. சிறப்பாக உள்ளது. நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் நாடு முழுவதும் உள்ள மதசார்பற்ற தலைவர்கள் ஒன்றுபட்டால் தான் அகற்ற முடியும். இதை நீங்கள் செய்தால் தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையும் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு கூறினார்.