தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில், தமிழ்நாட்டில், அதிமுக கூட்டணிக்கு கணிசமான இடங்கள் கிடைக்கும் என்பதாய் கூறப்பட்டுள்ளது. இது அரசியல் அரங்கில் ஆச்சர்யத்தையும் கிளப்பியுள்ளது.

வாக்குப் பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும், அதிமுகவுக்கு கணிசமான அளவிற்கு இடங்கள் கிடைக்கும் என்றே தெரிவித்தன.

பொதுவாக கருத்துக் கணிப்புகள் என்பது, மொத்த வாக்காளர்களில், மிகவும் சொற்பான நபர்களை மட்டுமே சந்தித்து மேற்கொள்ளப்படுவதாகும். அதுபோன்ற செயல்முறைகளில், சில வெற்றிகரமான நுட்பங்கள் கடைபிடிக்கப்படுகின்றன என்று கூறப்பட்டாலும், பெரும்பாலும் அவை நுட்பமாக அமைவதில்லை என்பதே நடைமுறை உண்மை.

பொதுவாக, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை, கூட்டணிகளுக்கு இடையே 8% முதல் 10% வரை வாக்கு வித்தியாசம் இருந்தால், அந்த கூடுதல் வித்தியாசம் கொண்ட அணி, தேர்தலில் ஸ்வீப் செய்துவிடும் என்பதே பொதுவான கருத்து.

அந்தவகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில், இந்த வித்தியாசம் இருந்ததால், திமுக கூட்டணி ஸ்வீப் செய்தது. தற்போது, அதைவிட அதிகளவில் வித்தியாசம் திமுக – அதிமுக கூட்டணிகளிடைய நிலவியது என்பதே பல மூத்த அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு.

அந்தவகையில் பார்த்தால், திமுக கூட்டணி இத்தேர்தலை ஸ்வீப் செய்யும். அதாவது, 200 முதல் 215 இடங்கள் வரை, அக்கூட்டணி வென்றுவிடும் என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது மற்றும் இருந்து வருகிறது.

ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், அதிமுகவிற்கு குறைந்தபட்சம் 46 முதல், அதிகபட்சம் 77 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் பலருக்கும் ஆச்சர்யத்த‍ையும், நம்பகத்தன்மை குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.