ரேன்பேக்ஸி நிறுவன அதிபரை சிறையில் இருந்து விடுவிக்க அவரது மனைவியை ஏமாற்றி 200 கோடி ரூபாய் பணம் பறித்தது உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் சுகேஷ் சந்திரசேகர்.
நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் ஆகியோரின் சிக்கலை தீர்த்துவைப்பதாகக் கூறி பல நூறு கோடி ரூபாய் சுருட்டிய சுகேஷ் சந்திரசேகர் 2019 ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் தொடர்பாக ரூ. 50 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லியில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோடிக்கணக்கில் பணம் குவித்தது குறித்து அமலாக்கத்துறை துருவித் துருவி விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா ஃபட்தேஹி மற்றும் லீனா மரியா பால் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், கடந்த வாரம் பணமோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது, அதில் நடிகை ஜாக்குலினிடம் இரண்டு முறை விசாரணை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.
நடிகை ஜாக்குலின் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஜாக்குலினை தொடர்பு கொள்ள பல்வேறு வழிகளில் முயற்சி செய்த சுகேஷ், அவரது மேக்கப் மேன் ஷான் முட்டத்திலை தொடர்பு கொண்டு தன்னை ஒரு அரசுத் துறை அதிகாரி என்று அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர் நடிகை ஜாக்குலினை, சேகர் ரத்ன வேலா என்ற ஒரு முக்கிய பிரமுகருடன் பேச சொல்லுமாறு கூறினார்.
ஜாக்குலினிடம் தன்னை சேகர் ரத்ன வேலா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட சுகேஷ் அதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலக தொலைபேசி எண்ணைப் போன்ற ஒரு எண்ணை இணையத்தளம் வாயிலாக பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வுக்கு நெருக்கமான அரசியல் செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்ட சுகேஷ் சன் டி.வி. நிறுவனம் தனக்கு சொந்தமானது என்றும் கூறியிருக்கிறார்.
இதனை உறுதிப்படுத்த, ஜாக்குலினுக்கு 52 லட்ச ரூபாய் மதிப்புள்ள குதிரை, 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள பெர்சிய பூனை மட்டுமல்லாமல் 7 கோடி ரூபாய்க்கு தங்க வைர நகைகளையும் வாங்கி கொடுத்திருக்கிறார்.
உலகின் முன்னணி நிறுவனங்களான ஹெர்ம்ஸ் பிரேஸ்லெட்ஸ், பிர்கின் ஹாண்ட்பாக், லூயி வுய்ட்டோன் காலணிகள் மட்டுமன்றி ஜிம்மில் அணிந்துகொள்ள Gucci உள்ளாடைகளையும் ஜாக்குலினுக்காக வாங்கி கொடுத்திருக்கிறார் சுகேஷ்.
இதனை ஜாக்குலினும் விசாரணையின் போது ஒப்புக்கொண்டதாக குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விலையுயர்ந்த பொருட்கள் மட்டுமன்றி கார்கள் உள்ளிட்டவை ஜாக்குலின் மற்றும் அவரது பெற்றோருக்கும் பரிசளித்திருக்கிறார் சுகேஷ்.